மதுரை, செப். 26: வாகனம் 7,500 கிலோவுக்கு குறைவான எடை கொண்டதாக இருந்தால் டிரைவர்கள் பேட்ச் எடுக்கத் தேவையில்லை என வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கூறியுள்ளார். மதுரையில் ஆட்டோ ஓட்டுனர்கள், உரிமையாளர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமில் பங்கேற்ற மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முரளி பேசியதாவது: சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தும் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு பேட்ச் எடுக்கத் தேவையில்லை. ஆனால் வாடகை உபயோகத்திற்கான வாகனங்களுக்கு பேட்ச் எடுக்க வேண்டியது கட்டாயம். ஆனால், இந்த நடைமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. சொந்தம், வாடகை என்ற அடிப்படை நீக்கப்பட்டு விட்டது. எடை அடிப்படையில் பேட்ச் எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதாவது ஆட்களை ஏற்றும் வாகனங்கள், பொருட்களை ஏற்றும் வாகனங்கள் என இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆள் ஏற்றும் வாகனத்தின் எடை 7,500 கிலோவுக்கு அதிகமாக இருத்தல் கூடாது. அதுபோல பொருட்கள் ஏற்றும் வாகனத்தின் எடையும் 7,500க்கு மேல் இருத்தல் கூடாது. உட்பட்டு தான் இருக்க வேண்டும். மொத்தம் 7,500 கிலோவுக்கு உட்பட்டு எடை இருக்கும் வாகனத்தை ஓட்டும் டிரைவர்கள் பேட்ச் எடுக்கத் தேவையில்லை. அதே சமயம் 7,500 கிலோவுக்கு மேல் எடை இருக்கும் கனரக வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் பேட்ச் கண்டிப்பாக எடுக்க வேண்டும். எடை அடிப்படையிலான பேட்ச் எடுக்கும் ஆணை இந்தியா முழுவதும் பொருந்தும்.
இவ்வாறு பேசினார்.
The post வாகனம் 7,500 கிலோவுக்கு குறைவாக இருந்தால் டிரைவர்கள் பேட்ச் எடுக்கத் தேவையில்லை: வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தகவல் appeared first on Dinakaran.