திருப்பதி கோயில் லட்டு விவகாரம்; மன்னிப்பு கேட்ட கார்த்திக்கு பவன்கல்யாண் நன்றி

திருமலை: பிரபல நடிகர் கார்த்தி நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம், வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் ஆந்திரா, தெலங்கானாவிலும் வெளியாகிறது. இதற்கான புரோமோசன் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது நிருபர்கள், ‘திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு நெய்யில் விலங்குகள் ெகாழுப்பு கலப்படம் செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்த்தி, ‘இப்போது லட்டு பற்றி பேச வேண்டாம். இது சென்சிட்டிவான டாப்பிக். இதனை பற்றி பேச விரும்பவில்லை’ என கூறி சிரித்தார். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், நடிகர் கார்த்தி லட்டு விஷயத்தை கிண்டலாக எடுத்து கொண்டு சிரிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து விஜயவாடாவில் விரதம் இருந்து வரும் ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாணிடம் நேற்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘லட்டு பற்றி சிலர் காமெடி செய்கின்றனர். லட்டு சென்சிடிவ் விஷயம் என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். இதற்கு கூட பதில் சொல்ல உங்களுக்கு தைரியம் இல்லையா?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு நடிகர் கார்த்தி பதிலளித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘டியர் பவன்கல்யாண்… உங்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது. எதிர்பாராத வகையில் நடந்த தவறான புரிதலுக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். வெங்கடேஸ்வராவின் பக்தன் என்ற முறையில் எப்போதும் நான் நம் மரபுகளை மதித்து நடக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பவன்கல்யாண் வெளியிட்டுள்ள பதிவில் மன்னிப்பு கேட்ட கார்த்திக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

The post திருப்பதி கோயில் லட்டு விவகாரம்; மன்னிப்பு கேட்ட கார்த்திக்கு பவன்கல்யாண் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: