புவனகிரி : புறவழிச் சாலையில் மின் கோபுரத்தை அகற்றி, மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூரில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக பு.முட்லூரில் எம்ஜிஆர் சிலை பஸ் நிறுத்தத்திற்கு முன்பாக புறவழிச் சாலை துவங்கி தீத்தாம்பாளையம் என்ற கிராமத்தில் முடிவடைகிறது.
இந்த புறவழிச்சாலை துவங்கும் இடத்தில் ஒரு மேம்பாலமும், முடிவடையும் இடத்தில் ஒரு மேம்பாலமும் கட்டப்பட்டு உள்ளது. இதில் பு.முட்லூர் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள மேம்பாலத்தின் ஒரு புறத்தில் மின்சார கோபுரம் ஒன்று செல்கிறது. இதனால் பாலத்தின் பணிகள் அந்த இடத்தில் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக இந்த பாலத்தில் போக்குவரத்து நடந்தது. மின்சார கோபுரம் உள்ள இடத்தில் மட்டும் ஒரே வழித்தடத்தில் இருபுறமும் வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன.
இதனால் சமீபத்தில் இந்த பாலத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த விபத்திற்கு முன்பாகவும், அந்த விபத்தை தொடர்ந்தும் அடிக்கடி இந்த இடத்தில் விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன.இந்நிலையில் கடந்த சில தினங்களாக பு.முட்லூர் புறவழிச் சாலையில் ஒரு புறத்தில் மட்டுமே வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு புறத்தில் உள்ள வழித்தடத்தில் உள்ள மேம்பாலம் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் மார்க்கத்திலிருந்து சிதம்பரம் நோக்கி வரும் வாகனங்கள் மட்டுமே புறவழிச்சாலை மேம்பாலத்தின் மீது செல்ல முடியும். ஆனால் சிதம்பரம் மார்க்கத்திலிருந்து கடலூர் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீத்தாம்பாளையம் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் இறங்கி பு.முட்லூர் ஊருக்குள் சென்று, அதன் பிறகு மீண்டும் நான்கு வழிச்சாலையை அடைந்து கடலூர் நோக்கி செல்ல வேண்டும்.
இதனால் லாரி, கார், சுற்றுலா பேருந்துகள் போன்றவை செல்வதற்கு அதிக நேரம் செலவாகிறது. மேம்பாலத்தில் சாலை அமைக்கும் பணிக்கு மின் கோபுரம் இடையூறாக இருக்கிறது. இந்த மின் கோபுரத்தை அகற்றினால்தான் மேம்பாலம் கட்டும் பணியை இந்த இடத்தில் துவங்க முடியும்.எனவே மேம்பாலம் மற்றும் அதற்கு கீழே சர்வீஸ் சாலை அமைப்பதற்கும் ஏதுவாக உடனடியாக மின் கோபுரத்தை அகற்ற வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை உடனடியாக மேம்பாலத்தின் எஞ்சிய பணிகளை கட்டி முடித்து இருபுறமும் போக்குவரத்திற்கு சாலை மற்றும் பாலத்தை திறந்து விட வேண்டும் என்பது வாகன ஓட்டுனர்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக இருக்கிறது.
The post பு.முட்லூர் புறவழிச்சாலையில் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.