×

தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து பேச பிரதமருடன் 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதிகள் தொடர்பாக வரும் 27ம் தேதி பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசுக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்ற நோக்கத்துடன் வஞ்சிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் மாநில அரசால் முன்வைக்கப்படுகின்றன.

அதற்கேற்ப ஒன்றிய அரசும் இந்தாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயரே இல்லாத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களின் கண்டனங்களை தெரிவித்தன. குறிப்பாக, மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கும்படி ஒன்றிய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. அதேபோல், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியையும் தமிழ்நாட்டிற்கு வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

அதேபோல், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கான ஒன்றிய அரசு பங்கு நிதி ஒதுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து கடந்த 14ம் தேதி சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மெட்ரோ ரயில் திட்ட நிதி தொடர்பாக பிரதமரை சந்திக்க உள்ளதாக கூறியிருந்தார். அதன்படி, வரும் 26ம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து, பிரதமர் மோடியை செப்.27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படலாம். இந்த பயணத்தின் போது, இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களையும் முதல்வர் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளன.

The post தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து பேச பிரதமருடன் 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Union Government ,Tamil Nadu ,Chennai ,Modi ,BJP government ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே...