புரட்டாசி மாதத்தில் மட்டும் வெங்கடேச பெருமாளுக்கு நோன்பு இருப்பது ஏன்? இதன் சிறப்பு என்ன?

புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண்முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் நெற்றி நிறைய திருமண் இட்டு பாத்திரம் ஏந்தி வீடு வீடாகச் சென்று ‘நாராயணா, கோபாலா…’ என்று அவன் நாமத்தை உச்சரித்து பிச்சை எடுத்து அதில் கிடைத்த அரிசியினை அரைத்து அதில் மாவிளக்கு மாவு இட்டு பெருமாளை சேவிப்பதை இன்றும் கிராமப்புறங்களில் காணமுடியும். கடந்த 10 ஆண்டுகளுக்குள் நாகரிகம் என்ற பெயரால் நகரங்களில் இந்தப் பழக்கம் காணாமல் போனது வருந்தத்தக்கது. நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புதன் பகவான். புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில். எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள். அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பார். சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான். புதனுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன். இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கரநாராயணரின் இணைவாகக் கருதப்படுகிறது. சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன் பெயர் பெற்ற காரணமும் இதுவே. இதன் மூலம் ஹரியும், சிவனும் ஒன்று என்ற கருத்து நமக்கு நன்றாக புலப்படுகிறது. எனவேதான் புரட்டாசி மாதத்தில் சைவ, வைணவ பேதம் இன்றி பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவினை தவிர்த்து சைவ உணவினையே உட்கொள்கின்றனர். மகாவிஷ்ணுவின் அம்சம் புதன் என்று வேதம் சொல்கிறது. அவ்வாறு இருக்க புரட்டாசியில் புதன்கிழமைதானே முக்கியத்துவம் பெறவேண்டும், மாறாக சனிக்கிழமை சிறப்பு பெறக் காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. பொதுவாக பெருமாளின் அடியவர்கள் மீது சனி பகவான் தனது முழு தாக்கத்தையும் காண்பிப்பதில்லை, மேலும் புரட்டாசி சனிக்கிழமை அன்று அவரது வீரியம் குறைந்திருக்கும் என புராணங்கள் உரைக்கின்றன. சனிக்கிழமையில் பெருமாளை சேவிப்போரை சனி ஒன்றும் செய்வதில்லை என்ற நம்பிக்கையினால்தான் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் சிறப்பு பெற்றுள்ளது. சனியின் தாக்கம் இல்லாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் புதன்கிழமையிலும் மாவிளக்கு மாவு இட்டு பெருமாளை சேவிக்கலாம்.

?‘கம்முனு கிட’ என்று பேசப்படும் கொச்சைச் சொற்கள் ஆன்மிகத்தோடு தொடர்புடையது என்கிறான் என் நண்பன். இது உண்மையா?
– ஜி.டி.சுப்ரமணியம், கொளத்தூர்.

உண்மைதான். ‘கம்முனு இரு’ என்ற வார்த்தை முழுக்க முழுக்க ஆன்மிகத்தோடு தொடர்பு உடையதே ஆகும். இந்த வார்த்தைக்கு ‘பேசாமல் சும்மா இரு’ என்று பொருள் கொள்ளக் கூடாது. ‘கம்’ என்பது விநாயகப் பெருமானுக்கு உரிய பீஜாக்ஷரம் ஆகும். ‘ஓம் கம் கணபதயே நம:’ என்ற மந்திரத்தை வேதியர் சொல்லக் கேட்டிருப்போம். ‘கம்’ என்ற பீஜாக்ஷரத்தைச் சேர்த்து மந்திரத்தைச் சொல்லும்போது நமது பிரார்த்தனை மேலும் வலுப்பெறுகிறது. நடைமுறை வாழ்வில் நமக்கு பிரச்னை உருவாகும்போது கணபதியே துணை என்று விநாயகப் பெருமானைச் சரணடைய வேண்டும் என்ற கருத்தை இந்த வார்த்தை வலியுறுத்துகிறது. கம்முனு இருந்தால் அதாவது, கம் கணபதியே துணை என்று இருந்தால் நிச்சயமாக விநாயகப் பெருமானின் திருவருளால் அந்தப் பிரச்னை காணாமல் போகும் என்பதே இதன் உட்கருத்து. ‘கம்முனு கிட’ என்ற வார்த்தை கணபதியை சரண் அடை என்ற கருத்தினைக் குறிப்பதால் இது ஆன்மிகம் தொடர்பான வார்த்தையே என்பதில் ஐயம் இல்லை.

?உலகில் நல்லவர்கள் அதிகமா? தீயவர்கள் அதிகமா?
– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

FOR EVERY ACTION, THERE IS EQUAL AND OPPOSITE REACTION என்பது நியூட்டனின் முன்றாம் விதி. இந்த அறிவியல் விதி இயற்கையின் அடிப்படைத் தத்துவங்கள் அனைத்திற்கும் பொருந்தும். இரவு-பகல், இன்பம்-துன்பம், வெயில்-மழை, நன்மை-தீமை போன்ற இருவேறு துருவங்கள் எவ்வாறு இந்த உலகில் நிறைந்திருக்கிறதோ, அவ்வாறே நல்லவர்களும், தீயவர்களும் இந்த உலகில் இடம் பிடித்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் வெயில் அதிகமாகவும், மழை குறைவாகவும் இருக்கலாம், பகல் பொழுது அதிகமாகவும், இரவுப் பொழுது குறைவாக அமையலாம், ஆனால் பொதுவாக, இந்த இரண்டு துருவங்களும் சம அளவில்தான் இந்த உலகில் இடம்பிடித்திருக்கின்றன. இந்த அடிப்படை விதிப்படி, உலகில் நல்லவர்களும், தீயவர்களும் சம அளவில் உள்ளார்கள் என்பதே உண்மை. நம் பாரததேசம், ஒரு புண்ணிய பூமி என்பதால் இங்கே நல்லவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்பது நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

?காளை சிவனுக்குரிய வாகனம். ஆனால், பசு எந்த கடவுளுக்கும் வாகனமாகவில்லையே, ஏன்?
– மல்லிகா அன்பழகன், சென்னை-78.

காளை மாத்திரமல்ல, சிங்கம், மயில், யானை, கருடன் என இறை மூர்த்தங்களின் அனைத்து வாகனங்களும் ஆண்பால் சார்ந்தவையே. பெண்பால் உயிரினத்தை வாகனமாகக் கொள்வது நமது பக்தி கலாச்சாரத்தில் இல்லை. மேலும் இந்து மதத்தினைப் பொறுத்தவரை பசு மிகவும் புனிதமானது. சரஸ்வதி தேவியே கோமாதாவிற்கு பூஜை செய்வதை திரைப்படங்களில் பார்த்திருப்போம். பசுவிற்குள் முப்பத்து முக்கோடி தேவர்களும் அடக்கம் என்பதால் எந்த கடவுளுக்கும் பசு வாகனமாக அமையவில்லை.

?கனவில் கோயில் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.

கனவில் வந்த கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். ஏதோ ஒரு பிரார்த்தனை நிலுவையில் உள்ளது, அதனை நினைவூட்டுவதற்காக கனவில் அந்த ஆலயம் தோன்றியுள்ளது என்று பெரியவர்கள் சொல்வார்கள். நிலுவையில் உள்ள பிரார்த்தனை அல்லது நேர்த்திக்கடனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நம் ஆழ்மனதில் உள்ள சிந்தனைகளே உறங்கும்போது கனவில் வருவதற்கான வாய்ப்பு அதிகம். நமக்கும், கனவில் வந்த ஆலயத்திற்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அது என்ன தொடர்பு என்பதை நமது குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் துணைகொண்டு அறிந்துகொள்வது நல்லது. அதன்மூலம் நம்மால் இயன்ற திருப்பணியினை அந்த ஆலயத்திற்குச் செய்ய வேண்டும்.

The post புரட்டாசி மாதத்தில் மட்டும் வெங்கடேச பெருமாளுக்கு நோன்பு இருப்பது ஏன்? இதன் சிறப்பு என்ன? appeared first on Dinakaran.

Related Stories: