வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை விட அக்சர் படேலுக்கு அதிக வாய்ப்பு

சென்னை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சமீபத்தில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்த வங்கதேச அணி இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. இந்த நிலையில் நாளை மறுதினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் தொடங்குகிறது.

வங்கதேச அணியை பொறுத்த வரை திறமை வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள், அனுபவம் மிக்க சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் என அந்த அணி எந்த அணியையும் எதிர் கொள்ளும் அணியாக வளர்ந்துள்ளது. அந்த வகையில் வங்கதேசத்தை வீழ்த்த கொஞ்சம் கடினமாக முயற்சிக்க வேண்டும் என்பதால் முதல் டெஸ்டுக்கான பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் தேர்வு குழுவினர் மிக கவனமாக செயல்பட்டு வருகிறார்கள்.

அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மாவும், மூன்றாவது வீரராக கில் களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. கில்லை பொறுத்த வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது தான் தனது காலடியை பதிய வைக்க தொடங்கியிருக்கிறார். எனினும் அணியில் தன்னுடைய இடத்தை அவர் உறுதி செய்ய வேண்டுமென்றால் வங்கதேச தொடரில் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டியது கட்டாயம். கில்லை தொடர்ந்து 4வது வீரராக விராட் கோஹ்லி களம் இறங்குகிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 மாதத்திற்கு பிறகு கோஹ்லி விளையாட இருக்கும் நிலையில், அவரை தொடர்ந்து 5வது வீரராக கே.எல்.ராகுல் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காயமடைந்து போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த கே.எல்.ராகுல் வங்கதேசத்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அவரால் அணியில் நீடிக்க முடியும்.

இத்தகைய சூழலில் 6வது வீரராக ரிஷப் பன்ட் விளையாட உள்ளார். கார் விபத்து காயம், நீண்ட ஓய்வு என டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு திரும்பியிருக்கும் ரிஷப் பன்ட், துலீப் கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடி தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். 7வது வீரராக ஆல்ரவுண்டர் ஜடேஜாவும், அவரை தொடர்ந்து தமிழக வீரர் அஸ்வின் களமிறங்க அதிக வாய்ப்பிருக்கிறது. இந்த சூழலில் அணியின் 3வது சுழற்பந்துவீச்சாளராக அக்சர் பட்டேல் களமிறங்குவாரா, இல்லை குல்தீப் களமிறங்குவாரா என்ற குழப்பம் நீடிக்கிறது.

குல்தீப் யாதவ் துலீப் கோப்பை தொடரில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஆனால் அக்சர் பட்டேல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஜொலித்திருக்கிறார். இதனால் அக்சர் பட்டேல் களமிறக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதைத்தொடர்ந்து அணியில் 10வது மற்றும் 11 வது வீரராக பும்ரா மற்றும் சிராஜ் விளையாடுவார்கள் என தெரிகிறது.

இந்தியாவின் உத்தேச பிளேயிங் லெவன் அணி: ரோகித் சர்மா (கேப்டன்). ஜெய்ஸ்வால், சுப்மன்கில், விராட் கோஹ்லி, கேஎல் ராகுல், ரிஷப் பன்ட் (வி.கீ), ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல்/குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ்.

The post வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை விட அக்சர் படேலுக்கு அதிக வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: