தமிழக அரசின் தொடர் முயற்சியால் உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 10 பேர் இன்று விமானத்தில் சென்னை வருகை: 20 பேர் ரயிலில் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு

புவனகிரி: தமிழக அரசின் தொடர் முயற்சியால் உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 10 பேர் இன்று விமானம் மூலம் சென்னை திரும்புகின்றனர். மீதமுள்ள 20 பேர் ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 30 பேர் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் தாவாகாட் என்ற குக்கிராமத்தில் சிக்கி தவித்தனர். கடந்த 14ம்தேதி ஏற்பட்ட இந்த சம்பவத்தை தொடர்ந்து, இவர்கள் தமிழ்நாடு அரசுக்கு தங்களை மீட்குமாறு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் 30 பேரும் 15ம்தேதி ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். பின்னர் அனைவரும் டார்சுலா என்ற இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி மற்றும் உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில் 30 பேரும் நேற்று காலை 2 வாகனங்கள் மூலம் டெல்லிக்கு புறப்பட்டனர். அவர்கள் சொந்த ஊர் திரும்ப தமிழ்நாடு அரசு உதவ வேண்டுமெனவும் வேண்டுகோள் வைத்தனர். வழியில் நிலச்சரிவால் சாலைகள் பாதிக்கப்பட்டதால் மாற்றுப் பாதையில் இவர்கள் வாகனம் வந்தது. நேற்றிரவு அனைவரும் புதுடெல்லி வந்தடைந்தனர். இதற்கிடையே தமிழ்நாடு அரசின் முயற்சியால் அதிகாரிகள் இவர்கள் ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 10 பயணிகள் சொந்த செலவில் இன்று காலை 7.10 மணிக்கு டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு காலை 9:55 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகின்றனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் சிதம்பரம் செல்கின்றனர். மற்ற 20 பயணிகளும் டெல்லியில் இருந்து இன்று அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் விரைவு ரயிலில் ஏசி கோச்சில் சென்னை வருகின்றனர். இந்த ரயில் நாளை (புதன்) மதியம் சென்னைக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து வாகனங்கள் மூலம் சிதம்பரத்திற்கு அனுப்பப்படுகின்றனர். இரவில் டெல்லி வந்து சேர்ந்த 30 பயணிகளுக்கும் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கனகராஜ் தெரிவித்தார்.

The post தமிழக அரசின் தொடர் முயற்சியால் உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 10 பேர் இன்று விமானத்தில் சென்னை வருகை: 20 பேர் ரயிலில் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: