ஆனால் ஆந்திராவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், இவர்கள் அனைவரும் விமானம் மூலம் டெல்லி சென்று பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக உத்தரகாண்ட் சென்றனர். ஆதி கைலாஷ் கோயிலுக்கு செல்வதற்கு முன்பே அங்கு நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்குள்ள ஒரு மடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் 3 நாட்களுக்கு பிறகு அவர்கள் ஆதி கைலாஷ் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு மீண்டும் டெல்லி திரும்ப திட்டமிட்டனர்.
நேற்று முன்தினம் மதியம் தவாகாட் என்ற இடத்தின் அருகே அவர்கள் வந்தபோது கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வேறு எந்த பகுதிக்கும் செல்ல முடியாத குழுவினர், அந்த இடத்திலேயே சிக்கித் தவித்தனர். போதிய உணவு, வாகன வசதி இல்லாததால் பெரும் சிரமங்களை சந்தித்தனர். இத்தகவல் பெறப்பட்ட உடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் ஆலோசித்தனர். தொடர்ந்து, கலெக்டர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோர்கர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அவர்களை பாதுகாக்கும்படி கூறினார்.
இதையடுத்து சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேரும் பாதுகாப்பாக ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று மழை விட்டது. இதைத்தொடர்ந்து தாவாகாட் கிராமத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி நடந்தது. ஒவ்வொரு முறையும் ஹெலிகாப்டரில் 5 பேராக அந்த இடத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தர்சுலா என்ற இடத்துக்கு வந்தனர். பின்னர் அங்கே அவர்களுக்கு மருத்துவ குழுவினர் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டது.
பின்னர் அனைவரும் அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இதனிடையே, மீட்கப்பட்ட தமிழர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘கவலைப்பட வேண்டாம், விரைந்து மீட்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது’’ என்று உத்தரவாதம் அளித்துள்ளார். அப்போது பேசிய பயணிகள், தங்களை மீட்க துரித நடவடிக்கை எடுத்துவரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தர்சுலாவில் இருந்து மீட்கப்பட்ட 30 தமிழர்களும் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் தமிழ்நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதன் மூலம் அவர்களது குடும்பத்தினரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
* ‘அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான பராசக்தி என்பவரை தொடர்புகொண்டு பேசினேன். மேலும், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்கு திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
* உயிருடன் திரும்ப மாட்டோம் என நினைத்தோம்
உத்தரகாண்ட் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட சிதம்பரத்தைச் சேர்ந்த மதியழகன், ஞானசேகரன் மற்றும் அலமேலு ஆகியோர் தொலைபேசியில் கூறுகையில், ‘‘நேற்று மதியம் (நேற்று முன்தினம்) நாங்கள் காரில் வந்தபோது 500 மீட்டர் தொலைவில் புகை மண்டலம் ஆகவும், வெடி சத்தம் கேட்டது. ரோடு முழுவதும் வெள்ளை மண்டலமாக காட்சியளித்தது. ஏதோ வெடி வெடிப்பதாகத்தான் முதலில் நினைத்தோம். ஆனால் தொடர்ச்சியாக நிலச்சரிவு ஏற்பட்டதை அறிந்து கொண்டோம்.
இங்கிருந்து சென்றவர்களுக்கு பெரும்பாலானவருக்கு சர்க்கரை, பிரஷர் நோய்கள் உள்ளன. அதற்கான மாத்திரைகள் தீர்ந்து விட்டது. தவியாய் தவித்துவிட்டோம். உயிரோடு ஊர் போய் சேரமாட்டோம் என நினைத்தோம். தற்போது மழை நின்றது. நிலச்சரிவு தொடர்ந்து நீடிக்கிறது. இன்று(நேற்று) காலை ஹெலிகாப்டர் மூலமாக ஒரு சுற்றுக்கு ஐந்து பேர் வீதம் அடுத்தடுத்து மீட்கப்பட்டனர்’’ என்றனர்.
* நிலச்சரிவில் சிக்கியவர்களிடம் பேசிய முதல்வரின் உரையாடல்
முதல்வர்: வணக்கம் நான் ஸ்டாலின் பேசுறேன்.
நிலச்சரிவில் சிக்கியவர்: வணக்கம் சார். நாங்க நல்லபடியா வந்துட்டோம். உங்களுடைய உதவி இல்லைன்னா நாங்க வந்திருக்க முடியாது சார்.
முதல்வர்: இப்போ எங்கமா இருக்கீங்க?
நிலச்சரிவில் சிக்கியவர்: மெடிக்கல் செக்கப் பண்ண கூட்டிட்டு வந்து இருக்காங்க சார்.
முதல்வர்: சரிம்மா.. அங்கே இருந்து நீங்க இங்க வந்ததும், பத்திரமா ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய சொல்லி இருக்கேன்.
நிலச்சரிவில் சிக்கியவர்: இப்போ 10 பேரு வந்து இருக்கோம் சார். இன்னும் 20 பேர் வந்துட்டு இருக்காங்க
முதல்வர்: தைரியமா இருங்க… எல்லோரிடமும் சொல்லுங்க.. அங்கே இருக்க கலெக்டரிடம் தொடர்ந்து பேசிட்டு இருக்கோம்.
நிலச்சரிவில் சிக்கியவர்: ரொம்ப நன்றி சார்.
முதல்வர்: வணக்கம் மா.
* மீட்கப்பட்டவர்கள் பெயர் விவரம்
உத்தரகாண்ட் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 30 தமிழர்கள்: சுப்பிரமணியன்(76), ரவிகிருஷ்ணன்(63), வசந்தா(58), சண்முக சுந்தரம்(73), பிரேமவதி(70), நடராஜன்(61), நடனம்(74), உமாராணி(61), தமிழரசி(64), அலமேலு கிருஷ்ணன்(73), பார்வதி(70), விஜயலட்சுமி(62), முருகன்(73), வாசுகி(69), குமாரி(61), பராசக்தி(75), சூர்யமூர்த்தி(67), வளர்மதி(61), சிவகாமி(62),ஜனசேகரன்(76), மதியழகன்(63), கனகசபை(65), ராதை(62), கனகராஜன்(61), கோமதி(54), மலர் மகாலிங்கம், சுந்தர்ராஜன்(63), எழிலரசி(60), சாந்தி(59), ராஜா அனுமான்(57).
The post உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கைக்கு நன்றி appeared first on Dinakaran.