×

ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆன்மீகவாதியாக மாறியது எப்படி; மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு பற்றி திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்


* காயகல்பம், ருத்ராட்சம், கருங்காலி மாலை விற்பனை மூலம் வசூல் வேட்டை
* ‘செக்ஸ் ஒரு இன்ப செயல்’ வீடியோ வெளியிட்டு வியூஸ்களை அள்ளியுள்ளார்

சென்னை: மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு குறித்த திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த மகா விஷ்ணு 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இருந்த போதும், தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக சிறுவயதிலேயே பிரபலமாகியுள்ளார். ஒரு மந்திரம் சொன்னால் மழை பெய்யும், ஒரு மந்திரம் சொன்னால் மழை நின்றுவிடும் என்று அள்ளி அள்ளி அளந்துவிடும் இந்த நபர் பள்ளிப்பருவத்தில் இருந்தே மேடைப்பேச்சாளராக இருந்துள்ளார். அதில் இருந்து அடுத்த கட்டத்துக்கு வளர்வதற்காக ‘நான் செய்த குறும்பு‘ என்ற படத்தை எடுக்க முயன்றார். அப்போது அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி விபத்தொன்றில் இறந்துவிடவே படம் நிறுத்தப்பட்டது. அப்போதுதான் ஆன்மிக சொற்பொழிவை கையில் எடுத்து அந்த வழியின் பயணப்பட ஆரம்பித்திருக்கிறார்.

அப்போது யூடியூபர் மதுரை மஹா என்ற அடையாளத்தை மஹா விஷ்ணு என்று இவர் மாற்றிக்கொண்டார். பரம்பொருள் அறக்கட்டளை என்ற யூடியூப் சேனலை தொடங்கி ஆன்மிக சொற்பொழிவாற்ற தொடங்கிய இவர் அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு அன்னதானம் வழங்குவதாக கூறி நன்கொடை திரட்டியிருக்கிறார். 2021-ல் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகம் அமைத்து அன்னதானத்தை வாடிக்கையாக்கிய மகாவிஷ்ணு, அதனை தனது யூடியூப் சேனலில் பிரபலப்படுத்தி யோகா, ஆன்மிக சொற்பொழிவு என முழுநேர ஆன்மிகவாதியாக அடையாளம் காட்டி கொண்டிருக்கிறார். தனது வகுப்பில் பங்கேற்க ஒருவருக்கு ரூ10 ஆயிரம் வரை வசூல் செய்ததாக அவரே சமூக வலைதளங்களில் கூறியிருக்கிறார். இப்படி வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்தும் அதிக அளவில் நன்கொடை பெற்று வளர்ந்திருக்கிறார்.

கடவுளை அடையும் வழி, ஜோதிடம் பொய்யா? மெய்யா?, செக்ஸ் ஒரு இன்ப செயல், பல பேர் மீது வரும் காம ஆசை என்ற தலைப்புகளில், பல்வேறு பேக்ரவுண்டில் பல வீடியோக்களை தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு, தோனி, சின்னத்திரை நடிகை சித்ராவின் இறப்பு குறித்து பேசியும் ஆயிரக்கணக்கில் வியூஸ்களை அள்ளி இருக்கிறார். தான் பெருமாளின் அவதாரம் என குடுகுடுப்பைக்காரர் தனது தாயிடம் சொன்னதாக கூறியுள்ள மகா விஷ்ணு, யூடியூபில் பேசியதை மக்களிடையே இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று ஞானப்பாதையின் வழிகாட்டி என்ற பெயரில் கட்டணம் வசூலித்து பல ஆன்மீக போதனைகளை நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுற்றி வரும் இந்த மகா விஷ்ணுவின் வகுப்பில் பங்கேற்க ஒருவருக்கு ரூ2000 முதல் ரூ10,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால் மாதத்திற்கு பல லட்சம் பணமழை கொட்டுகிறது மகாவிஷ்ணுவின் காட்டில். மேலும் தன்னை சித்த மருத்துவம் படித்தவராக கூறிக்கொள்ளும் இவர், குருவின் கருணை என்ற பெயரில் காயகல்ப லேகியம், ருத்ராட்சம், கருங்காலி மாலை, வெயிட் லாஸ் பவுடர், விநாயகர் சிலை என பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இதில் ரூ25 ஆயிரம் ரூபாய்க்கு தான் விற்கும் உள்ளங்கைக்கும் சிறியதாக உள்ள காரியசித்தி விநாயகர் சிலையை வாங்கி பூஜை செய்தால், குடும்பம், வியாரம் போன்றவற்றில் உள்ள அனைத்து தீய சக்திகளையும் எளிதில் போக்கலாம் என்றும், மற்ற சிலைகளின் பூஜையை விட 100 மடங்கு அதிக பலனைத் தருவதாகவும் கூறுகிறார். இப்படி தனது பேச்சின் மூலமும், பல பொருட்களை மக்களிடம் நம்பிக்கையுடன் மார்க்கெட்டிங் செய்து விற்பதன் மூலம் வசூல் வேட்டை நடத்தி வருகிறார் இந்த குருஜி மகா விஷ்ணு மீது புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆன்மிக சொற்பொழிவாற்றி மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் நித்யானந்தா, பாலியல் சர்ச்சையிலும் சிக்கி பிரபல நடிகையோடு இருப்பது போல வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வரிசையில் மகா விஷ்ணுவும் புதிதாக உதயமாகி இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பாணியில், கொடைக்கானலில் ஆன்மீக ெசாற்பொழிவு என்ற பெயரில் இளைஞர்கள், பெண்களை அழைத்து சென்று அவர்களை ஆடவிட்டு மகா விஷ்ணு வேடிக்கை பார்த்ததாக வெளியாகி வரும் தகவல்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகா விஷ்ணுவை நாங்கள் கூப்பிடவில்லை: கை கழுவிய பள்ளி மேலாண்மை குழு
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மகாவிஷ்ணு பேசியிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பேசியதாக புகார்கள் எழுந்த நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், மகாவிஷ்ணுவை நாங்கள் பரிந்துரைக்கவில்லை என்று பள்ளி மேலாண்மைக் குழு விளக்கமளித்திருக்கிறது. இந்த விவகாரத்தில், மகாவிஷ்ணுவை பள்ளிக்கு பேச பரிந்துரை செய்தது பள்ளி மேலாண்மை குழுதான் என்று தகவல்கள் பரவின. இதனையடுத்து பள்ளி மேலாண்மை குழு தற்போது விளக்கமளித்துள்ளது. ‘‘பள்ளிக்கு சிறப்பு அழைப்பாளராக மகா விஷ்ணுவை பள்ளி மேலாண்மைக் குழு பரிந்துரைக்கவில்லை. பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. நிகழ்ச்சி நிரல் குழுவுக்கு தெரியாது மூடநம்பிக்கை தொடர்பான எந்த நிகழ்ச்சிகளும் பள்ளியில் கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு’’ என அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சித்ரகலா கூறியுள்ளார்.

திருப்பூர் டூ சிட்னி வரை வசூல்: வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய போலீஸ் திட்டம்
அரசு பள்ளியில் சர்ச்சை பேச்சு பேசி கைதாகி உள்ள மகாவிஷ்ணுவுக்கு திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட குளத்துப்பாளையம் பகுதியில் பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகம் உள்ளது. இங்கு அவிநாசி போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசார், அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். பரம்பொருள் அறக்கட்டளைக்கு மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் கிளைகள் உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டத்தில் குளத்துப்பாளையத்தில் மட்டுமே அலுவலகம் உள்ளது. தொழிலதிபர்களை குறிவைத்து குளத்துப்பாளையம் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு அலுவலகத்தை மகாவிஷ்ணு தொடங்கியுள்ளார்.
தொழில் நிறுவன உரிமையாளர்களிடம் தொழிலாளர்களுக்கு ஆன்மிகம், மற்றும் மூடநம்பிக்கை, புத்துணர்ச்சி வகுப்புகள் நடத்துவதாக கூறி அதிகளவில் பணம் பறித்து வந்துள்ளார்.

தொடர்ந்து பணம் கொழிக்கும் நாடுகளில் அறக்கட்டளையை தொடங்கினார். அவிநாசி குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள அறக்கட்டளை மூலமாக ஏழை மக்களுக்கு தினமும் உணவு வழங்க வேண்டும் என கூறியும் பலரிடம் நிதி பெற்றதாக கூறப்படுகிறது. அறக்கட்டளைக்கு எங்கிருந்து எவ்வளவு பணம் வந்துள்ளது, எதற்காக அந்த பணம் வந்துள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர். மகாவிஷ்ணு பள்ளிகளில் தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களை பரப்பி வந்துள்ளார். இதற்கு பெற்றோர்கள் மற்றும் பலரும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர். மாணவ மாணவிகளின் எதிர்காலம் கருதி இது போன்ற விஷம பிரசாரத்தில் ஈடுபடுகிறவர்களின் நிகழ்ச்சிகளுக்கு பள்ளிகளில் அனுமதி வழங்கக்கூடாது என பெற்றோர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மகாவிஷ்ணு மீது மாற்றுத் திறனாளிகள் நல சங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரும் புகார் தெரிவிக்க தயாராகி உள்ளனர்.

The post ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆன்மீகவாதியாக மாறியது எப்படி; மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு பற்றி திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Mahavishnu ,Kayakalpam ,Rudraksam ,Chennai ,Maha Vishnu ,
× RELATED அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை...