×

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி

சென்னை: சென்னையில் இருந்து தோகா புறப்பட்டுச் செல்ல வேண்டிய கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று ஐந்தரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால், 320 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் கடும் அவதிப்பட்டனர்.
கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அதிகாலை 3 மணிக்கு தோகாவிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டு, அதே விமானம் மீண்டும் அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து தோகாவுக்கு புறப்பட்டு செல்லும். அந்த விமானத்தில் நேற்று சென்னையில் இருந்து தோகா செல்வதற்கு சுமார் 320 பயணிகள் காத்திருந்தனர். அவர்கள் அதிகாலை 1.30 மணிக்கே சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டனர்.

ஆனால், தோகாவிலிருந்து அதிகாலை 3 மணிக்கு சென்னை வர வேண்டிய கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தோகாவிலிருந்து தாமதமாக புறப்படுவதால், சென்னையில் இருந்து கத்தார் செல்லும் பயணிகள் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. காலை 6.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்பு 7.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேரம் கடந்து கொண்டு இருந்ததே தவிர விமானம் தோகாவில் இருந்து வரவும் இல்லை, சென்னையில் இருந்து புறப்படவும் இல்லை.

இதையடுத்து பயணிகள் ஆத்திரம் அடைந்து கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இவர்களுக்கு டீ, காபி, குளிர்பானங்கள் வழங்கி அதிகாரிகள் அமைதிப்படுத்தினர். இந்நிலையில் காலை 8 மணி அளவில் அந்த விமானம் தோகாவிலிருந்து சென்னை வந்து சேர்ந்தது. இதையடுத்து, விமானம் சுத்தப்படுத்தப்பட்டு, அதன்பின்பு பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டு நேற்று காலை 9.40 மணிக்கு சென்னையில் இருந்து 320 பயணிகளுடன் விமானம் கத்தார் நாட்டுத் தலைநகர் தோகாவுக்கு புறப்பட்டுச் சென்றது. தோகா புறப்படவிருந்த விமானம் ஐந்தரை மணி நேரம் தாமதமானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

The post தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Doha ,Chennai airport ,Chennai ,Qatar Airways ,Qatar ,Dinakaran ,
× RELATED விமானத்தில் 5 மணிநேரம் தவித்த பயணிகள்