25 ஆண்டுக்கு பின் ஒப்புக்கொண்ட தளபதி: கார்கில் போரில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவம்


இஸ்லாமாபாத்: கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவம் பங்கேற்றதை அந்த நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனீர் ஒப்பு கொண்டுள்ளார். 1999ம் ஆண்டு லடாக் பகுதியில் உள்ள கார்கிலில் பாகிஸ்தான் படையினர் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ராணுவத்தினரை அங்கிருந்து விரட்டி அடித்தனர். கார்கில் போரில் நுாற்றுக்கணக்கான இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். கார்கில் போரின் 25வது வருட வெற்றி தினம் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆனால் இதுவரை கார்கிலில் நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறிவந்தனர். தற்போது முதல்முறையாக அதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ராவல் பிண்டியில் நேற்று நடந்த பாதுகாப்பு தின விழாவில் ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முனீர் பேசும்போது, ‘இந்தியாவுடன் நடந்த பல்வேறு போர்கள் குறித்தும் தாய்நாட்டை காக்க பலர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். பாகிஸ்தான் துணிச்சலான மற்றும் வீரம் செறிந்த நாடு. நாட்டின் சுதந்திரத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது நாட்டினருக்கு தெரியும். 1948, 1965, 1971, கார்கில் மற்றும் சியாச்சின் மோதல்களில் ஆயிரக்கணக்கானோர் நாட்டின் பாதுகாப்புக்கும், நாட்டின் கவுரவத்துக்காகவும் உயிரிழந்துள்ளனர்’ என்றார். கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவம் பங்கேற்றதை அந்த நாடு முதல்முறையாக ஒப்பு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 25 ஆண்டுக்கு பின் ஒப்புக்கொண்ட தளபதி: கார்கில் போரில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவம் appeared first on Dinakaran.

Related Stories: