×

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்தியக்கூறு உள்ள பகுதிகளில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

சென்னை, செப். 6: இந்தியாவின் அனைத்து கடலோர மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்திய கூறு உள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மற்றும் நுண்ணறிவுப் பிரிவினரின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக சாகர் கவாச் என்றழைக்கப்படும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையானது கடந்த 4ம் தேதி முதல் 5ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயிற்சியில் இந்திய கடலோரப் பாதுகாப்பு படை இந்திய கப்பற்படை மத்திய தொழில் பாதுகாப்பு படை நுண்ணறிவுப்பிரிவினர், சுங்கத்துறை, வனத்துறை, மீன்வளத்துறை குடியுரிமை துறை, தேசிய பாதுகாப்பு குழு, இந்திய எண்ணை மற்றும் எரிவாயு ஆணையம், துறைமுகங்கள், உள்ளிட்ட மத்திய மாநில அரசுசார் நிறுவனங்களோடு தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழுமம் மற்றும் மாநில காவல் துறையினர் என சுமார் 10000த்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்கள் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படைகளை சேர்ந்த பாதுகாவலர்கள் ஒரு பிரிவாக பிரிக்கப்பட்டு அவர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை போல கடல் வழியாக தமிழக நிலப்பகுதியில் ஊடுருவி பாதுகாக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் வழிபாட்டுத்தலங்கள் மத்திய அரசு நிறுவனங்கள், மக்கள் அதிகமாக புழுங்கும் சந்தைப்பகுதி வணிக வளாகங்கள் பள்ளி கல்லூரிகள் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு வைத்தல், பொதுமக்களை அச்சுறுத்தல், கலவரப்படுத்துகிற நடவடிக்கைகளில் இறங்குதல் முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்களையும் அரசு வாகனங்கள் மற்றும் கப்பல்களைக் கடத்துதல், கடத்தி பிணைய கைதிகளைப் பிடித்து வைத்தல் போன்ற தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் திட்டமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மற்றொரு பாதுகாப்பு படைகளை சேர்ந்த பிரிவினர்கள் அவர்களை ஊடுருவாமால் தடுக்கும் பணியில் தேவையான கப்பல்கள் படகுகள் ஹெலிகாப்டர்கள் இடை மறிக்கும் படகுகள், கரையோரம் ஓடும் வாகனங்கள் என 1000த்திற்கு அதிகமான ஊர்திகளோடு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடலோரப் பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் 28 படகுகள் திருவள்ளூர் முதல் கன்னியகுமாரி வரையிலான கடலோர பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டன. மேலும் கண்காணிப்பு ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன.

தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கென நியமிக்கப்பட்டு தமிழக கடலோரப் பகுதிகளில் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட காவலர்களில் 25 இடங்களில் இடைமறிக்கப்பட்டு 95 நபர்கள் பிடிக்கப்பட்டு பாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டனர். அதன் பயிற்சியின் ஒரு பகுதியாக தீவிரவாத ஒத்திகை பயிற்சி காமராஜர் துறைமுகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் மகா ஜக்குலின் என்ற கப்பலை கைப்பற்றி அதில் உள்ள 30 ஊழியர்கள் மற்றும் மாலுமிகளை பிணைய கைதிகளாக பிடித்து வைத்து அவர்களை விடுவிக்க நிபந்தனை வைத்தார்கள். இதை மறுத்து தமிழ்நாடு அரசு தேசிய பாதுகாப்பு படைவீரர்கள் மூலம் அதிரடி நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டது.

அந்த உத்தரவின் கூடுதல் காவல் துறை இயக்குநர் கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மாநில கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் மேற்பார்வையில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், தமிழ்நாடு கமாண்டோ படை வீரர்கள் இந்திய கடற்படை இந்திய கடலோர பாதுகாப்பு படைமூலம் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 தீவிரவாதிகள் பிடிக்கப்பட்டு பிணையகைதிகளை கப்பலை மீட்டனர். காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத் தலைவர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி சஞ்சய் குமார், கூடுதல் காவல்துறை இயக்குநர் துறை இயக்குநர் கடலோர பாதுகாப்பு குழுமம் நேரடி மேற்பார்வையின்படி இப்பயிற்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

The post தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்தியக்கூறு உள்ள பகுதிகளில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Defense ,Sagar Gavach ,India ,
× RELATED சென்னை ஐஐடி வழங்கும் 48 வார நிர்வாக எம்பிஏ படிப்பு தொடக்கம்