தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் ஆறுமுகநேரி முதல் வீரபாண்டியன்பட்டினம் வரை சாலை சீரமைப்பு

ஆறுமுகநேரி, ஆக.29: தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் ஆறுமுகநேரி முதல் வீரபாண்டியன்பட்டினம் வரை சாலை சீரமைப்பு பணி துவங்கியது. இதனால் வாகனங்கள் அனைத்தும் மாற்றும்பாதையில் இயக்கப்படுகிறது.

தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் ஆறுமுகநேரியில் இருந்து அடைக்கலாபுரம் வழியாக வீரபாண்டியன்பட்டினம் வரையுள்ள சாலை மாநில நெடுஞ்சாலைதுறையின் கீழ் உள்ளது. இவ்வழியாக வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், உவரி, கன்னியாகுமரி போன்ற இடங்களிலுள்ள புண்ணியஸ்தலங்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரை மற்றும் வாகனங்களில் வந்துச்செல்வதற்கு முக்கிய சாலையாக பயன்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக இச்சாலை ஆங்காங்கே சேதமடைந்தது. இதனை சீரமைக்க அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் நேற்று காலை மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் வீரபாண்டியன்பட்டினம் முதல் ஆறுமுகநேரி ஜங்சன் வரை 6.2கி.மீ. தூரம் சாலை சீரமைத்து புதியசாலை அமைக்கும் பணி துவங்கியது. இப்பணியானது 5 நாட்களுக்குள் முடிவடையும் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சாலை சீரமைப்பு பணி துவங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை திடீரென ஆறுமுகநேரி ஜங்சனில் பேரிகார்டு வைத்து ஆறுமுகநேரியில் இருந்து அடைக்கலாபுரம் வழியாக வாகனங்கள் செல்ல போலீசாரால் தடை செய்யப்பட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் கல்லூரி, பள்ளி வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், காரில் செல்லக்கூடிய பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து போலீசார் மாற்றுப்பாதையில் காயல்பட்டினம் வழியாக செல்ல அறிவுறுத்தியதின்பேரில் அனைத்து வாகனங்களும் அவ்வழியாக இயக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பிற்பகல் 2 மணியில் இருந்து கனரக வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் இவ்வழியாக செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.

வியாபாரிகள் பாதிப்பு
நெடுஞ்சாலை துறை மற்றும் சாலை ஒப்பந்தக்காரர்கள் சார்பில் ஆறுமுகநேரி காவல்துறைக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நேற்று முன்தினம் வரை எந்தவித அறிவிப்பும் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளுக்கு தெரியப்படுத்தவில்லை.

இந்நிலையில் அடைக்கலாபுரம் சாலையில் அமைந்துள்ள 15க்கும் மேற்பட்ட பெரிய உணவகங்களின் உரிமையாளர்கள் காலை மற்றும் மதிய உணவுகளை தயார் செய்து வைத்துள்ளனர். பின்னர் இவ்வழியாக எந்த வாகனங்களும் செல்லவில்லை என்பதை தெரிந்துக்கொண்டனர். இதனால் அடைக்கலாபுரம் சாலை உணவு வியாபாரிகள் மற்றும் சாலையோர பனைபொருள் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

The post தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் ஆறுமுகநேரி முதல் வீரபாண்டியன்பட்டினம் வரை சாலை சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: