தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (06.09.2024) மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (07.09.2024) காலை 08:30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து, செப்.9 ஆம் தேதி வாக்கில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

இந்த காற்றழுத்ததாழ்வு மண்டலமானது, அடுத்த 3 நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் – வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளை நோக்கி நகரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

The post தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: