பெற்றோரை திருமணமான அரசு ஊழியரின் காப்பீட்டு திட்டத்தில் குடும்ப உறுப்பினராக சேர்ப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பெலிக்ஸ் ராஜ் என்பவர் தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்திருந்தார். இந்த திட்டத்தின் கீழ் அவரது ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை காப்பீட்டு நிறுவனத்திற்கு அரசு செலுத்தி வந்தது. இந்நிலையில், சாலை விபத்தில் காயமடைந்த தந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு செலவான ரூ.6 லட்சத்து 54 ஆயிரத்து 100 ரூபாயை வழங்க கோரி பெலிக்ஸ் ராஜ் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்த அரசு, காப்பீட்டு திட்ட விதிகளின்படி திருமணமான அரசு ஊழியரின் பெற்றோர், குடும்ப உறுப்பினர் என்ற வரம்புக்குள் வரமாட்டார்கள் எனக்கூறி அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது. இதை எதிர்த்து, பெலிக்ஸ் ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுதீர் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, திருமணமானாலும் அரசு ஊழியரின் பெற்றோர் அவரின் பெற்றோராகவே நீடிப்பதால் காப்பீட்டுத் திட்ட பலன்களை மறுக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, மனுதாரர் பெலிக்ஸ் ராஜின் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து 8 வாரங்களில், மருத்துவச் செலவை தமிழக அரசு திருப்பி வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரை குடும்ப உறுப்பினர்களாக சேர்க்காமல் விலக்கி வைத்தது சட்டவிரோதமானது. காப்பீட்டு திட்ட பலன்களை திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரும் பெறும் வகையில் அவர்களை அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களாக சேர்ப்பது குறித்து 3 மாதங்களில் தமிழக தலைமை செயலாளர் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post பெற்றோரை திருமணமான அரசு ஊழியரின் காப்பீட்டு திட்டத்தில் குடும்ப உறுப்பினராக சேர்ப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: