ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியல்: சிபிஐ விசாரிக்க கோரிக்கை

சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்தநிலையில் நேற்று காலை ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடலை ஒப்படைக்க மருத்துவ நிர்வாகம் முடிவு செய்த நிலையில், உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததுடன் தொண்டர்கள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வெளியே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், ‘‘உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் கொலை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனிடையே போலீஸ் உயரதிகாரிகள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டம் நடத்திவரும் ஆம்ஸ்ட்ராங்க் உறவினர்கள் மற்றும் தொண்டர்களிடம் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர், இருப்பினும் போராட்டத்தை கைவிடாததால் காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.

* பெரம்பூரிலும் மறியல்
பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதைக்க வேண்டும் என வலியுறுத்தி, இரு பிரிவுகளாக பிரிந்து பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா அருகே நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த மறியலால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல செய்தனர்.

* ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த மாயாவதி இன்று சென்னை வருகை
பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன் தினம் மாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே படுகொலை செய்யப்பட்டார். தலித் மக்களின் குரலாக இருந்த அவரது இறப்பு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க மாநில அரசு உடனடியாக கடுமையான மற்றும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இன்று காலை சென்னைக்கு வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறேன். தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியல்: சிபிஐ விசாரிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: