சிசுவின் பாலினம் தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை பாயும்: காஞ்சி கலெக்டர் எச்சரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் மையங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலை மருத்துவர்களுக்கு மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், குழந்தை திருமணம், வளர் இளம் பருவத்தில் கர்ப்பம், சிசு பாலினம் தெரிவிக்காமை, தொற்று நோய்கள், தொற்றா நோய்கள், மக்களை தேடி மருத்துவம், காலநிலை மாற்றம், தொழுநோய், காசநோய், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டம் மற்றும் இந்த திட்டங்களில் சுயப்பதிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து கலெக்டர் கூறுகையில், ”கர்ப்ப காலத்தில் சிசுவின் பாலினத்தை தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும். குழந்தை திருமணம் செய்பவர்கள் மீதும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து தகவல் கொடுக்காத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார். கூட்டத்தில், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் செந்தில், இணை இயக்குநர் கோபிநாத் மற்றும் 92 ஸ்கேன் மையங்கள், 50 தனியார் மகப்பேறு மருத்துவர்கள், 82 தொழிற்சாலை மருத்துவர்கள், மாவட்ட சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

The post சிசுவின் பாலினம் தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை பாயும்: காஞ்சி கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: