பூந்தமல்லி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி பகுதி கடைகளில் இருந்து நேற்று 100 கிலோ பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சர்வதேச நெகிழி பை தடுப்பு தினத்தை முன்னிட்டு, பூந்தமல்லி பகுதி கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பை மற்றும் இயற்கை பொருட்களிலான கைப்பைகளை பயன்படுத்தும்படி அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பை பயன்பாடு, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பூந்தமல்லி நகராட்சி பகுதி கடைகள் மற்றும் நிறுவனங்களில் நேற்று காலை முதல் மாலைவரை நகரமன்றத் தலைவர் காஞ்சனா சுதாகர் ஆலோசனைப்படி, நகராட்சி ஆணையர் லதா உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் ஐயப்பன், பொது சுகாதார துறை ஆய்வாளர் வடிவேலு தலைமையில் ஊழியர்கள் அதிரடி சோதனை நடத்தி ஆய்வு மேற்கொண்டனர். இச்சோதனையில், கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் சிகரெட் உள்பட 100 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும் என்று நகராட்சி சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

The post பூந்தமல்லி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: