ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு..!!

ராஞ்சி: ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் முதல்வராக இருந்தவர் ஹேமந்த் சோரன். ஜேஎம்எம் கட்சியின் தலைவரான ஹேமந்த்தை சட்டவிரோதமாக நிலம் வாங்கியதாக குற்றம் சாட்டி அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி கைது செய்தது. அதன் பின்னர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.ஹேமந்த் சோரன் பதவி விலகலை தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வரானார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் ராஞ்சியின், பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்டு ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து. ஜாமீன் கேட்டு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை கடந்த 28ம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ரோங்கன் முகோபாத்யாய, ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சம்பாய் சோரன் வீட்டில் ஜேஎம்எம் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் ஜேஎம்எம் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக ஹேமந்த் சோரனை தேர்வு செய்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சம்பாய் சோரன் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் ஹேமந்த் சோரன் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். ஜார்க்கண்டில் புதிய ஆட்சியை அமைக்க அழைப்பு விடுத்துள்ளாதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

The post ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: