ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்

புதுடெல்லி: பாஜவின் கொள்கை வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி நேற்று பதிலளித்தார். அப்போது பிரதமரின் உரையை பாதியில் புறக்கணித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் கார்கே, குடியரசு தலைவரின் உரை மீதான விவாதத்து்ககு பதிலளித்த பிரதமர் மோடி தவறான தகவல்களை கொடுத்ததால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். பொய்களை சொல்வதும், மக்களை தவறாக வழிநடத்துவதும், உண்மைக்கு எதிராக பேசுவதும் அவரது வழக்கமாகும். அரசியலமைப்பு குறித்து பிரதமர் மோடி பேசும்போது, நீங்கள் அரசியலமைப்பை எழுதவில்லை என்று நான் கூற விரும்பினேன். நீங்கள் அரசியலமைப்பின் எதிர்ப்பாளர்கள்.

அரசியலமைப்புக்கு ஆதரவானவர் யார்? எதிரானவர் யார்? என்று நான் தெளிவுபடுத்த விரும்பினேன். அரசியலமைப்பை எதிர்த்தவர்கள், நிராகரித்தவர்கள் இப்போது அது குறித்து பேசுகிறார்கள். தொடக்கத்தில் இருந்து அவர்கள் அரசியலமைப்புக்கு எதிரானவர்கள் தான். பாஜவின் கொள்கை வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அரசியலமைப்புக்கு எதிரானது தான்” என்றார்.

பிரதமர் இன்னும் மணிப்பூருக்கு செல்லாதது ஏன்?
மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, மணிப்பூரில் வன்முறைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றது, பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது, முழுமையான அமைதி திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார். இதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘பல மாத மவுனத்துக்கு பின் பிரதமர் மணிப்பூரின் நிலைமை சாதாரணமானது என வியக்கத்தக்க கூற்றை தெரிவித்துள்ளார். உண்மையில் மணிப்பூரில் பதற்றம் அதிகரித்துள்ளது. பிரதமர் இப்போது வரை மணிப்பூர் செல்லாதது ஏன்?”என்றார்.

The post ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: