அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலை கடும் விமர்சனம்

விக்கிரவாண்டி: அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி என அண்ணாமலை தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் விக்கிரவாண்டியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அதிமுகவின் தொண்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து செல்லத் தொடங்கி விட்டனர். கரையான் போல் அதிமுக கரைந்து கொண்டிருக்கிறது. ஓரிருவரை பேச வைத்து அதிமுகவை காப்பாற்றி விடலாம் என எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார்.

பழனிசாமி உள்ளிட்ட 3 பேரின் சுய லாபத்துக்காக செய்யும் அரசியலால் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 2019ஆம் ஆண்டு முதல் தொடர் தோல்வியை சந்திக்கிறது. தலைமை சரியில்லாததால் அதிமுக பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. அதிமுக கோட்டை எனக்கூறும் கோவையில் 3 சட்டமன்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. கோவையில் அதிமுகவை விட 2 மடங்கு வாக்குகள் பாஜக பெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி கண்ணாடி எடுத்து அவர் முகத்தை நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டும்.

எடப்பாடி பழனிசாமி கண்ணாடியை நன்றாக பார்த்து கொண்டால், கண்ணாடி எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுரை சொல்லும். எடப்பாடி பழனிசாமி தயவுசெய்து எனக்கு அறிவுரை சொல்லவேண்டாம். எடப்பாடி பழனிசாமி பாஜகவை தவறாக பேசியதற்கு மாநிலத் தலைவர் என்ற முறையில் பதிலடி கொடுக்க வேண்டும். கோவையில் 13ஆயிரம் வாக்குகள் கூடுதல் பெற்று டெபாசிட் வாங்கி தப்பிவிட்டு எடப்பாடி வீரவசனம் பேசுகிறார். கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 9 எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவினர்தானே; ஏன் வாக்கு சதவீதம் 17-ஆக குறைந்தது. அதிமுகவை கண்முன்னால் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் சுயலாபத்துடன் செயல்படுவதால் அதிமுக அழிகிறது.

சுயலாபத்திற்காக, அதிகார வெறிக்காக அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைமை சரியில்லாததால்தான் அதிமுகவுக்கு மக்கள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள். தன் கட்சியை காப்பாற்ற முடியாத எடப்பாடி பழனிசாமி எனக்கு அறிவுரை கூறத் தேவையில்ல. ஈரோடு இடைத்தேர்தலில் ஒபிஎஸ் தரப்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என என்னிடம் கூறினார் இபிஎஸ். எடப்பாடி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஜென்டில் மேனாக ஓ.பி.எஸ். விலகிக் கொண்டார். போட்டியிடாததற்கு புதுப் புது காரணங்களை கண்டுபிடித்து கூறிவருகிறார் இபிஎஸ்.

2026-லும் சட்டம் ஒழுங்கு சரி இருக்காது; அப்போதும் சட்டமன்ற தேர்தலை இபிஎஸ் புறக்கணிப்பாரா? தோல்வியடைவோம் என தெரிந்தும் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டது ஏன்?. நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான். அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி. அதிமுகவுக்கு அடிமையாக இருப்பதற்காக நாங்கள் கட்சியை நடத்தவில்லை. பாஜகவுக்கும், எனக்கும் பாடம் எடுக்கும் அருகதை எடப்பாடிக்கு இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்காக 134 வாக்குறுதிகளை கொடுத்த பழனிசாமி, அதை எப்போது நிறைவேற்றுவார்.

ஒரு எம்.பி கூட இல்லாத எடப்பாடி பழனிசாமி 134 வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவார். எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு முன்பு சிந்தித்து பேசவேண்டும். கோயம்புத்தூர் தொகுதியில் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்று கூறினார்.

 

The post அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலை கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: