அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தங்களை இணைக்க கோரிய அமலாக்கத்துறை மனு தள்ளுபடி: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தங்களை இணைக்க கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 2001-06ம் ஆண்டு காலத்தில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.90 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது 2006ம் ஆண்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு உதவுவதற்காக, தங்களையும் மனுதாரராக சேர்க்கக்கோரி அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பிலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் தரப்பிலும் ஏற்கனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, அமலாக்கத்துறையிடம் எவ்வித ஆவணங்களும் இந்த வழக்கில் இல்லை. மேலும் இந்த வழக்கில் 71 சாட்சிகளிடம் விசாரணை முடிந்து விட்டது. வழக்கின் விசாரணை நிறைவடையும் நிலையில், 3வது அமைப்பின் குறுக்கீடு தேவை இல்லை. எனவே அமலாக்கத் துறை அளிக்கும் ஆவணங்களை ஏற்கக் கூடாது என்று வாதிட்டார். சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் அமலாக்கத்துறை வழக்கறிஞர் ரமேஷ் ஆஜரானார். இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை நீதிபதி ஐயப்பன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தங்களை இணைக்க கோரிய அமலாக்கத்துறை மனு தள்ளுபடி: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: