கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தேவையில்லை: சென்னை ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷ சாராயம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு விசாரணைக்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை, பாமக வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவின் அறிக்கையை கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், “சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மாவட்ட கலெக்டர் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று நடவடிக்கை எடுத்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சம்பவம் தொடர்பான வருவாய்த்துறையினர் உடனடியாக விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கபட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

விஷ சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், சிகிச்சை பெற்று வருவதற்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. உடனடியாக விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், மதுவிலக்கு ஏடிஜிபி ஆகிய அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் விசாரணை நடத்தி கள்ளச்சாராயத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அறிக்கை அளிக்கவுள்ளது. இதுவரை சிபிசிஐடி காவல்துறை 132 சாட்சிகளிடம் விசாரித்து வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிபிசிஐடியின் 6 குழுக்கள் வேகமாக விசாரணை நடத்தித வருகின்றன. விசாரணை விரிவாகவும், துரிதமாகவும் நடைபெற்று வருகிறது. தமிழக டிஜிபி தலைமையில் அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணையை கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 2023ம் ஆண்டு மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடைபெற்ற விஷ சாராய மரணங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சம்பவத்தில் 99.1 சதவீதம் மெத்தனால் இருந்தது கண்டறியப்பட்டது. தற்போது கள்ளக்குறிச்சியில் கைபற்றிய விஷ சாராயத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் வரை மெத்தனால் கலந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கள்ளக்குறிச்சி சம்பவம் மரக்காணம் மட்டும் செங்கல்பட்டு சம்பவத்தின் தொடர்ச்சி என்று கூற முடியாது. கள்ளக்குறிச்சி விசை சாராய சம்பவம் தனி சம்பவம் ஆகும். கள்ளச்சாராய புகார்கள் தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு வாட்ஸ் அப் குழுக்கள் வழங்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளுக்கு வழங்கி வரும் மெத்தனால் கண்காணிக்கப்படுகிறது. கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகின்றது. அடிக்கடி திடீர் சோதனைகள் நடத்தி வருகிறார்கள்.

விஷ சாராய குற்றங்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள். மாநில அரசு இந்த சம்பவம் குறித்து கவனமாக விசாரித்து வருகிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மாநில காவல் துறை விசாரித்து வரும் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை. சில அரிதான அல்லது விசாரணையில் முன்னேற்றம் இல்லாத வழக்குகளை மட்டுமே சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோர முடியும். இந்த வழக்கில் தமிழக காவல்துறை சிறப்பாக விசாரித்து வரும் நிலையில் சிபிஐ விசாரணை தேவையில்லை. இந்த வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை தொடங்கிய 5 நாட்களில் 21 தனி நபர்கள், 6 சில்லறை விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 700 லிட்டர் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வந்து, கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனை வரை அதிகரித்து சட்டம் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஜாமீன் வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் புதிய சட்டம் அமலுக்கு வரும் எனவும் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி விசச்சாராயத்திற்கு இதுவரை 65 பேர் மரணம் அடைந்துள்ளனர். 145 சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை. எனவே. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தொடங்கியவுடன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், வழக்கை தள்ளிவைக்குமாறு கோரினார். இதையடுத்து, விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

* சிபிசிஐடி போலீசார் விரிவாகவும், விரைவாகவும் விசாரணை நடத்துகிறார்கள்.
* விசாரணையில் முன்னேற்றம் இல்லாத வழக்குகளை மட்டுமே சிபிஐ விசாரிக்க கோர முடியும்.

The post கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தேவையில்லை: சென்னை ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: