100 சதவீத வெற்றியால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு; கோவையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது

சென்னை: மக்களவை தேர்தலில் இந்தியாவே வியந்து பார்க்கும் வெற்றிக்கு வித்திட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட பாராட்டு உள்பட திமுக முப்பெரும் விழா கோவையில் தொடங்கியது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் 40 எம்.பி.க்கள் பங்கேறுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றிக்கு வித்திட்ட திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழாவாக கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தலைவர் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தலைவர் இரா.அதியமான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் 40 எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர்.

இதற்கான விழா மேடை 40 அடி அகலத்தில், 150 அடி நீளத்தில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஒரு பகுதியிலும், 40 எம்பிக்கள் ஒரு பகுதியிலும் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர விழா நடைபெறும் இடத்தில் தொண்டர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவதால் மாவட்ட வாரியாக பிரித்து, அவர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 5 இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விழாவை தொண்டர்கள் கண்டு ரசிப்பதற்கு வசதியாக மிக பிரமாண்ட எல்.இ.டி திரைகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post 100 சதவீத வெற்றியால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு; கோவையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: