கரூர், மே. 16: கரூர், திருச்சி பைபாஸ் சாலை சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்கள் நடமாட்டம் காரணமாக மக்கள் இந்த பகுதியை கடந்து செல்ல அஞ்சுகின்றனர். கரூர் திருச்சி பைபாஸ் சாலையில், உப்பிடமங்கலம், சீத்தப்பட்டி, குன்னனூர் போன்ற பகுதிகளுக்கு சாலை பிரியும் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதே போல திருச்சி பைபாஸ் சாலையில் சீத்தப்பட்டி பிரிவு சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ்ப்புறம் குகை வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் செல்லும் வகையில் இந்த குகை வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் புலியூர் போன்ற பகுதிகளில் இருந்து சீத்தப்பட்டி, ஏமூர், வெள்ளியணை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் இந்த குகை வழிப்பாதையின் வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், பகல் நேரங்களில் காலை 12மணி முதல் மாலை 5மணி வரை, பல்வேறு பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் சரக்குகளை மொத்தமாக வாங்கி வந்து, குகை வழிப்பாதையின் உட்புறம் அமர்ந்து குடித்து விட்டு, போதையில் பாட்டில்களை அங்கேயே உடைத்து போட்டு விட்டு செல்கின்றனர். இதனால், மக்கள் இந்த பகுதியின் வழியாக கடந்தும், நடந்தும் செல்ல அச்சப்பட்டு வருகின்றனர்.
மேலும், இதையும் மீறி செல்லும் இரண்டு சக்கர வாகனங்கள் பஞ்சராகி பழுதடையும் போன்ற நிலை இந்த பகுதியில் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. குடிமகன்களின் இடையூறு காரணமாக பகல் நேரங்களில் மக்கள் இந்த பகுதியின் வழியாக செல்ல அச்சப்பட்டு வரும் சூழல் இந்த பகுதியில் நிலவி வருகிறது.
இது குறித்து பொதுநல ஆர்வலர்கள் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் அவ்வப்போது ரோந்து பணியை மேற்கொண்டு, அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post 2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம் appeared first on Dinakaran.