திருவாரூர், மே 16: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ள திட்டை, தாராபுரம் சாலையை நெடுஞ்சாலை துறை உள்தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் பணிகளின் தரம் மற்றும் கட்டுமானம் குறித்து கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையிலான உள்தணிக்கை குழுவினர் ஆண்டுதோறும் ஆய்வு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி திருவாரூர் & மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் பேரளம் ரயில்வே மேம்பாலத்திற்காக ரூ 40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் அணுகு சாலையை கடந்த 11ந் தேதி திருச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி தலைமையிலான பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ள திட்டை, தாராபுரம் சாலையை திருவாரூர் பராமரிப்பு கோட்டத்திற்குட்பட்ட குடவாசல் உட்கோட்ட எல்லையில் நேற்று மதுரை தேசிய நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் தலைமையில் திருச்சி தேசிய கோட்ட பொறியாளர் சேதுபதி, தஞ்சை உதவி கோட்ட பொறியாளர் கிஷோர் ஆகியோர் கொண்ட பொறியாளர் குழுவினர் சாலையின் தரம் மற்றும் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்தனர். இதில் திருவாரூர் கோட்ட பொறியாளர் இளம்வழுதி, குடவாசல் கோட்ட பொறியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post வலங்கைமான் அருகே ரூ.4.70 கோடியில் திட்டை, தாராபுரம் சாலை பணி appeared first on Dinakaran.