திருவாரூர், மே 16: திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் இயங்கி வரும் வாகன பாதுகாப்பு நிலையம் இடநெருக்கடியில் சிக்கி தவித்து வருவதால் கூடுதலாக வேறு ஒரு வாகன பாதுகாப்பு நிலையம் அமைத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். திருவாரூரில் இருந்து வந்த பஸ் நிலையமானது இடநெருக்கடியில் சிக்கி தவித்து வந்ததன் காணரமாக கடந்த தி.மு.க ஆட்சி காலத்தின் போது 2010ம் ஆண்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தியாகபெருமாநல்லூர் பகுதியில் 18 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு பஸ் நிலையம் அமைப்பதற்காக ரூ.6 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.2011ல் ஆட்சி மாற்றம் காரணமாக பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டு பின்னர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி மூலம் வீடியோ கான்பிரன்சிங் முறையில் திறந்து வைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த பஸ் நிலைய கட்டுமான பணி என்பது தரமற்றதாக இருப்பதாகவும், இதேபோல் சாலைகள் மற்றும் இருசக்கர வாகன பாதுகாப்பகம் போன்றவையும் தரமற்றதாக இருப்பதாக கூறி திருவாரூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஒப்பந்தகாரான சென்னையை சேர்ந்த முருகவேல் உட்பட 7 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இடநெருக்கடி மட்டுமின்றி பெண்கள் மற்றும் வயதானவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை இந்த பாதுகாப்பு நிலையத்தில் உள்ளே சென்று நிறுத்திவிட்டு மீண்டும் அங்கிருந்து வெளியில் எடுப்பது என்பது மிகப் பரிய போராட்டமாக இருந்து வருகிறது.
இதுமட்டுமின்றி நகராட்சி மூலம் ரூ.5 மட்டுமே கட்டணமாக வசூல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. வாகன பாதுகாப்பு நிலையத்தில் வாகனம் ஒன்றுக்கு ரூ.20 வரையில் வசூல் செய்யப்படுகிறது. அவ்வாறு வசூல் செய்யப்பட்டு ஒரு புறமிருந்தாலும் தங்களது வாகனத்தை சிரமமின்றி நிறுத்திவிட்டு மீண்டும் எடுப்பது இயலாத காரியம் மட்டுமின்றி பல்வேறு நேரங்களில் இட நெருக்கடி காரணமாக பெரும்பாலான வாகனங்கள் மழையிலும், வெயிலிலும் நிறுத்தும் நிலைதான் இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள், பயணிகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் நலன் கருதி கூடுதலாக ஒரு பாதுகாப்பு நிலையம் புதிய பஸ் நிலையத்தில் அமைக்க வேண்டும். நகராட்சி நிர்ணயித்துள்ள கட்டணத்தையே ஒப்பந்தகாரர்கள் வசூல் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post 20ம் தேதி கோலாகலமான தெப்போற்சவம் புதிய பஸ் நிலையத்தில் கூடுதல் வாகன பாதுகாப்பு நிலையம் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.