ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக மாநில பொருளாளரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸ் முடிவு..!!

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜக நிர்வாகி முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர் சதீஷிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஓட்டுநர் பெருமாள், நயினார் உறவினர் முருகன், முருகனின் ஊழியர்கள் ஜெய்சங்கர், ஆசைத்தம்பியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே, தமிழ்நாடு பாஜக பொருளாதார பிரிவு தலைவர் கோவர்த்தனின் வீடு மற்றும் கடைகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. கோவர்தனன் வீட்டில் இல்லாததால், அவருடைய மகன்கள் பாலாஜி, கிஷோர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்திவிட்டு சென்றனர். அதேபோல சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது ஓட்டலிலும் விசாரணை நடைபெற்றது. இதில், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜக நிர்வாகி முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆலோசனையானது தற்போது நடைபெற்று வருகிறது. உயர் அதிகாரிகளின் அறிவுரை பெற்று ஓரிரு நாட்களில் இருவருக்கும் சம்மன் அனுப்பி, சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸ் முடிவு செய்துள்ளது.

The post ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக மாநில பொருளாளரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸ் முடிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: