குடியாத்தம் அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கு; குடிபோதை தகராறில் கல்லால் தாக்கி கொன்றேன்: நண்பர் வாக்குமூலம்

குடியாத்தம்: குடியாத்தம் அருகே கட்டிட ெதாழிலாளியை குடிபோதை தகராறில் கல்லால் தாக்கி கொன்றதாக அவரது நண்பர் வாக்குமூலம் அளித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் குமார்(21), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2ம்தேதி நண்பர்களுடன் மது குடிக்க சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். கடந்த 4ம்தேதி பள்ளி விளையாட்டு மைதானத்தின் அருகே உள்ள ஏரிக்கால்வாயில் கல்லால் தாக்கி முகம் சிதைந்த நிலையில் பலத்த காயத்துடன் குமார் சடலமாக கிடந்தார். இதையடுத்து குடியாத்தம் தாலுகா போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த குமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட 10 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர். இவர்களில் 5 பேரை நேற்று விடுவித்தனர். ஆனால் மற்ற 5 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதனிடையே மற்ற 5 பேரையும் விடுவிக்கக்கோரி அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலைய வளாகம் முன் நேற்றிரவு குவிந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி ரவிச்சந்திரன் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, `உண்மையான குற்றவாளியை நெருங்கிவிட்டோம். கொலையில் சம்பந்தம் இல்லாதவர்களை விரைவில் விடுவிப்போம்’ என கூறினார். இதையேற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 பேரில் ஒருவரான தட்டப்பாறையை சேர்ந்த மனோஜ் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் கொலையான குமாரின் நண்பர் ஆவார். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் குமாரை கல்லால் தாக்கி கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து மற்ற 4 பேரையும் விடுவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மனோஜை போலீசார் குடியாத்தம் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post குடியாத்தம் அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கு; குடிபோதை தகராறில் கல்லால் தாக்கி கொன்றேன்: நண்பர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: