திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை; அதிமுக மாஜி அமைச்சரின் உதவியாளர் கைது: மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வந்தது அம்பலம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் உதவியாளர் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனையை தடுக்க தமிழக போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இதனால் கஞ்சா விற்பனையை தடுக்க தமிழக அரசு எல்லைகளில் அதிரடி வேட்டையை நடத்தி வருகிறது. தீவிர வாகனச் சோதனையும் நடத்தி வருகிறது.

இந்தநிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் போலீசார் வாகனச் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவர் முதல்சேத்தியை அடுத்த மும்மூர்த்தி, விநாயகர்கோயில் தெருவைச் சேர்ந்த தீபன்(எ) பார்த்திபன் (31), குணா(எ)சற்குணம் (28), சபரிகண்ணன் (22) ஆகியோர் என்று தெரிந்தது. அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டபோது அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. இதனால் பிடிபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களில் தீபன் (எ) பார்த்திபன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் உதவியாளராக இருந்தவர். தீபன் மூலம் கும்பகோணம், வலங்கைமான், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல் பகுதிகளில் அதிக அளவு கஞ்சா விநியோகம் செய்து வந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ள சாக்கோட்டை தினேஷூம், பார்த்திபனும் நெருங்கிய நண்பர்கள். கஞ்சா விற்பனையிலும் ஒன்றாக இணைந்து செயல்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அதிமுக சமீபத்தில் ஆர்பாட்டம் நடத்தியது. ஆனால் கஞ்சா விற்பனை அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் அதிகமாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக அதிமுகவினர் சிலர் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தநிலையில் கஞ்சா விற்பனை செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சரின் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை; அதிமுக மாஜி அமைச்சரின் உதவியாளர் கைது: மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வந்தது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: