கர்நாடகாவில் இருந்து சித்தூருக்கு காரில் கடத்தல் ₹2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்

*3 பேர் கைது

சித்தூர் : கர்நாடகாவில் இருந்து சித்தூருக்கு காரில் கடத்திய ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து, 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சித்தூர் இரண்டாவது காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஓலஸ் கூறியதாவது: சித்தூர் இரண்டாவது காவல் நிலையத்திற்கு கர்நாடகாவில் இருந்து சித்தூருக்கு கர்நாடகா மது பாட்டில்கள் கடத்துவதாக ரகசிய தகவல் வந்தது.

அதன்பேரில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் சித்தூர் ஜானகார பள்ளி பகுதியில் இரண்டாவது காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறைந்து நின்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தனியார் போர்டு அருகே காரிலிருந்து மது பாட்டில்கள் இறக்குமதி செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.

ஆனால் போலீசார் வருவதைப் பார்த்து அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும் போலீசார் 3 பேரை மடக்கிப் பிடித்தனர். இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். காரை சோதனை செய்து 2500 கர்நாடகா மது பாட்டில்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனுடைய மதிப்பு ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் மதுபாட்டில்களை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் தேர்தல் நடைபெற இருப்பதால் கர்நாடகாவில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில்கள் வாங்கி வந்து சித்தூர் மாநகரத்தில் பல்வேறு பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் சித்தூர் நகரத்தை சேர்ந்தவர்கள் சாய் கிருஷ்ணா, ஆனந்த், நவீன் குமார், என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடத்தி வந்த கர்நாடகா மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இவர்கள் எந்தெந்த பகுதியில் யார் யார் மூலம் கர்நாடக மது பாட்டில்கள் விற்பனை செய்கிறார்கள். இவர்களுக்கு உடனடியாக யார் யார் செயல்பட்டு வருகிறார்கள் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கர்நாடகாவில் இருந்து சித்தூருக்கு காரில் கடத்தல் ₹2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: