தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

பந்தலூர் : பந்தலூர் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அம்பேத்கர் மக்கள் இயக்க செயலாளர் இந்திரஜித் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌஷாத் ஆகியோர் பந்தலூர் மேங்கோராஞ், ரிச்மௌண்ட உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எஸ்டேட் தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்றனர்.

இதுகுறித்து இந்திரஜித், நௌசாத் ஆகியோர் மேலும் கூறும்போது, ‘‘பந்தலூர் ஒட்டியுள்ள மேங்கோராஞ், ரிச்மௌண்ட உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு எஸ்டேட் சார்பாக குடியிருக்க குடியிருப்புகள் வழங்கப்பட்டு வந்தது. மூன்றாவது தலைமுறையாக பணியாற்றும் இவர்களில் பெரும்பான்மையான தற்போது ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். எஸ்டேட்டில் ஒருவர் பணியாற்றினால் பாதி வீடும் 2 பேருக்கு மேல் பணியாற்றினால் 3 அறைகள் கொண்ட முழு வீடும் வழங்குகின்றனர். ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களை எஸ்டேட் நிர்வாகம் வீடுகளை காலி செய்து வெளியேற வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் பல ஆண்டுகளாக தேயிலை தோட்ட வேலையை நம்பி மட்டுமே வேலை செய்து வந்த இவர்களால் வெளியே தனியாக இடம் வாங்கும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் இல்லாத சூழலே இருந்து வந்தது. எனவே இவர்களால் சொந்தமான வீடுகள், நிலங்கள் இல்லாத சூழலில் எஸ்டேட் நிர்வாகம் வெளியேற சொல்வதால் இவர்களுக்கு தங்க வேறு இடம் இன்றி தவிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் அல்லது இவர்களுக்கு குடியிருக்க வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தனர். இந்த கையெழுத்து இயக்கத்தில் மேங்கோரஞ், ரிச் மௌண்ட் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருக்கும் 200-க்கும் மேற்பட்டோர் பட்டா வேண்டும் என கேட்டு கையெழுத்திட்டனர்.

The post தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: