கருடன் கருணை

ஜெயகோஷம் வின்னை பிளந்தபடி இருந்தது. காஞ்சி மாநகரமே விழா கோலம் பூண்டு விட்டது. தெருவெங்கும் பல வண்ணக் கோலங்கள். மேளதாளங்கள் என்று ஒரே அமர்களம்தான். எள்ளை போட்டால் எடுக்க முடியாத அளவு கூட்டம். வேத, திவ்யப் பிரபந்தங்களின் பாராயணத்தின் ஆரவாரம் என்று ஒரே கோலாகலம் தான்.கூடியிருந்த அத்தனை பேரும் நெற்றி நிறைய திருமண் காப்பு அணிந்து, வாய் நிறைய மாலவன் புகழ் பாடிய படி இருந்தார்கள்.அந்தத் திருமால் அடியாரின் கூட்டத்திற்கு நடுவே மெல்ல அசைந்தாடியபடி ஒரு பல்லக்கு வந்து கொண்டிருந்தது. அந்த பல்லக்கில் வரும் நபரை வரவேற்கத்தான் இத்தனை கோலாகலங்களும். அப்படி பல்லக்கில் வரும் நபர்தான் யார்?

ராமானுஜரின் விசிஷ்டாத்வைத சம்பிரதாயத்தை நிலை நிறுத்த ஜனித்த உத்தமர். பரமபதங்களை வென்று, வைஷ்ணவ தர்மத்தை நிலை நிறுத்திய வித்தகர். ஞானத்தாலும் தவத்தாலும் உயர்ந்த சமர்த்தர். வேதாந்த தேசிகர் என்பது அவரது திருநாமம். அந்த மகானை வரவேற்கத்தான் இத்தனை ஆரவாரங்களும். அவர் தனது கருணை விழி நோக்கால், அனைவருக்கும் அருளிய படியே இருந்தார். அவரது பல்லக்கு மெல்ல மெல்ல அசைந்து வருவது, தங்கப் பெட்டியில், ஞான சூரியனை வைத்து எடுத்து வருவது போல இருந்தது.

இத்தனையையும் கண்ட அந்த மாந்த்ரீகனுக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது. நாமும்தான் மாயம் செய்கிறோம், மந்திரம் செய்கிறோம். நம்மை யாரும் மதிப்பதில்லையே ? என்று உள்ளம் புழுங்கினான். மாய் மாலங்களுக்கும், தெய்வ அருளால் நடக்கும் அதிசயங்களுக்கும் வித்தியாசம் தெரியாத மூடன்!அவரைவிட தான் பல விதங்களில் சிறந்தவன் என்று எண்ணிய அந்த மாந்த்ரீகன், அதை இன்று ஊரறிய உலகறிய காட்ட வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டான். தனது கச்சையை இழுத்துக் முடிந்து கொண்டு, தேசிகரின் பல்லக்கை நோக்கி வேகமாக நடந்தான்.

பல்லக்கை எதிர் சென்று தடுத்து நிறுத்தினான். பல்லக்கிலிருந்து வெளிவந்த தேசிகர் அவனை கருணை பொங்க பார்த்தார். அந்த அருள் பார்வையின் முன்பும், அவன் எப்படி கல் நெஞ்சனாக நின்றானோ.? அதை அந்த மாந்த்ரீகனே அறிவான்.தேசிகரை கண்ட மாந்த்ரீகன் ஏளன புன்னகை பூத்தபடியே பேச ஆரம்பித்தான்.‘‘சுவாமி! உங்களை எல்லாரும் ‘‘சர்வ தந்த்ர ஸ்வதந்திரர்” என்று சொல்கிறார்கள். அதாவது கலை, அறிவியல், சாஸ்திரம் என்று அனைத்தையும் நன்கு ஆராய்ந்து அறிந்தவர் என்று பொருள்.

எனில் தங்களால் என்னை ஜெயிக்க முடியுமா?” வார்த்தைகள் மட்டுமே (பேருக்கு மாத்திரம்) மரியாதையோடு இருப்பதையும், அதன் பொருளிலும், உச்சரிக்கும் த்வனியிலும் , ஏளனமே மிதமிஞ்சி இருப்பதையும் தேசிகரும் கூடி இருந்தவர்களும் அறியாமல் இல்லை. அவன் பேசியதை கேட்ட தேசிகர், அவனது அறியாமையை எண்ணி மனம் நொந்தார். அவனுக்கும் நல்ல கதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று அவரது உள்ளுணர்வு சொல்லியது. ஆகவே, அவனை ஆடவிட்டு அடக்குவோம் என்று எண்ணியபடியே பேச ஆரம்பித்தார்.

‘‘நீ சொல்வது போல, நான் அனைத்தும் அறிந்தவனா என்று எனக்கு தெரியாது. ஒரு வேளை நீ சொல்வது உண்மையாக இருந்தால், அதன் பெருமை அனைத்தும் என் குருநாதரின் திருவடிக்குகே சேரும். சொல் அப்பனே, நான் என்ன செய்ய வேண்டும்.” அடக்கத்தோடு பேசினார் தேசிகர். இந்தக் காட்டுமிராண்டியிடமும் அடக்கத்தை கைவிடாத அவரது இயல்பு கூட்டத்தில் பல பேரை மலைக்க வைத்தது (நம்மையும் தான்)‘‘பேச்செல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது ஸ்வாமி! கொஞ்சம் அதை நிறுத்தி விட்டு செயலில் இறங்குங்கள். முடிந்தால் நான் அனுப்பும் பாம்புகளை தடுத்துக் காட்டுங்கள்!” என்று அறைகூவலிட்டான் மாந்த்ரீகன்.

‘‘நான் தான் முன்னமே சொன்னேனே, முயற்சிக்கிறேன் என்று” தேசிகர் நிதானத்தை கைவிடவில்லை. சுற்றி இருந்த தேசிகரது சீடர்களுக்கு தேசிகரின் மகிமையின் மீதில் சந்தேகமில்லை. அதே சமயம் அந்த மந்திரவாதியும் சளைத்தவன் இல்லை. பல மந்திரங்களை கற்றவன். அவனிடம் , ஆபத்தான பல மந்திரிக்கப் பட்ட பாம்புகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் கொடூரமானவை கொடிய விஷம் கொண்டவை. என்ன நடக்கப் போகிறது என்று விளங்காமல் கூட்டமே ஸ்தம்பித்து நின்றது.

தேசிகரை விட்டு, சற்று தொலைவில் சென்ற மாந்த்ரீகன், ஒன்றல்ல இரண்டல்ல பல மந்திரப் பாம்புகளை ஒரே நேரத்தில் தேசிகரை நோக்கி ஏவினான். ஒவ்வொன்றும் சீரிய படி தேசிகரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட தேசிகர் ஏதோ மந்திரத்தை முனுமுனுத்த படி தரையில் ஒரு கோடு கிழித்தார். பின்பு கைகளை கூப்பிய படி வணங்க ஆரம்பித்து விட்டார். தேசிகரை நோக்கி சீரி வந்த பாம்புகள் எல்லாம் அவர் நிலத்தில் மணலில் தனது விரலால் கிழித்த கோட்டை தாண்ட முடியாமல் மயங்கியது. அதைக் கண்ட கூட்டம் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தது. மந்திரவாதிக்கோ பற்றிக் கொண்டு வந்தது.

முன்னம் சொன்ன அபிசார மந்திரங்களை விட கொடிய அபிசார மந்திரங்களை ஜெபித்து, ஒரு கொடிய நாகத்தை கடைசி அஸ்திரமாக தேசிகரை எதிர்த்து ஏவினான். அந்த நாகம் தேசிகர் கிழித்திருந்த கோட்டை வெகு இலகுவாக தாண்டியது. அவரை நோக்கி சீரிய படி ஊர்ந்து வந்தது. நொடியில் சுதாரித்த தேசிகர், தனது கிண்கிணி மணிக் குரலில் பாட ஆரம்பித்தார்.

‘‘நம: பந்நக நத்தாய வைகுண்ட்ட
வசவா்த்திநே |
ச்ருதி ஸிந்து ஸதோத்பாத மந்தராய கத்த
மநே ||

– என்று ஆரம்பித்து கருட தண்டகம் என்னும் ஸ்லோகத்தை வெகு அழகாக பாடினார். கருட பகவானின் அருமை பெருமைகளை எல்லாம் எடுத்து சொல்லி, பரம்பொருளை தாங்கும் உன்னத நிலையை அடைந்த கருட பகவானை நெஞ்சுறுகி வணங்கினார். அந்த துதி, சொல்பவர் மனதையும் கேட்பவர் இதயத்தையும் கொள்ளை கொள்ளும். அந்த அற்புத துதியின் பொருள் சுருக்கம் பின் வருமாறு.

பொருட் சுருக்கம்: வேதங்களின் உருவமாய் இருத்தல், பகவானுக்கு வாகனமாகவும் கொடியாகவும் இருத்தல், ருத்ரை சுகீர்த்தி என்ற இரு மனைவியுடைமை, நாகங்களை அணியாக அணியும் வல்லமை, தாயான வினதையின் அடிமை தனத்தை போக்க அமுதத்தை கவர்ந்து வந்தமை,
இந்திரனையே வென்றமை, எல்லையில்லாத வீரமுடைமை, சாக்ஷாத் சங்கர்ஷனரது
(திருமாலின் ஒரு வடிவம்)

அம்சமாக இருத்தல். சத்யர், ஸுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர், விஹகேஷ்வர் என்ற ஐந்து வடிவங்கள் உடைமை, பக்தர்களுக்கு வேத வேதாந்த ஞானத்தை அருளுதல், பெரியோர்களால் வழிபடப் பெறுதல், வேத மந்திரத்தின் பொருளாய் விளங்குதல், நால்வகை பயன்களையும் (அறம், பொருள், இன்பம், வீடு) அருளுதல், வாலகில்ய முனிவர்களின் தவ வலிமையால் உண்டானவை போன்ற கருட பகவானின் பல பெருமைகள் தோத்திரம் எங்கும் மனக்கிறது.

கருட தண்டகம் என்ற இந்த துதி, வேண்டியோருக்கு வேண்டியதெல்லாம் தந்து, அவர்களது பகையை வென்று, நல்லனை எல்லாம் தருவது, இன்றும் கண்கூடு.சுவாமிகள் இப்படி அழகாக கருட தண்டகம் பாடி முடித்ததும், எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என்று தெரியாத படி ஒரு கருட பட்சி பறந்து வந்தது. பறந்து வந்த அந்த பக்ஷி காரியமே கண்ணாக சுவாமிகளை நோக்கி சீரி வந்துக் கொண்டிருந்த அந்த கொடிய நாகத்தை தன்னுடைய காலால் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்துவிட்டது. நொடியில் நடந்துவிட்ட இந்த சம்பவத்தை நம்ப முடியாமல் கூட்டமே, ஸ்தம்பித்து போய் நின்று கொண்டிருந்தது. அந்த மந்திரவாதியும் கூட ஸ்தம்பித்து தான் போனான். ஒருவழியாக சுய நினைவுக்கு வந்தவன், தன்னுடைய தவறை உணர்ந்து, ஓடிச் சென்று சுவாமிகளின் பாதத்தில் விழுந்தான்.

‘‘சுவாமி! நிறை குடம் என்றுமே தளும்பாது! அதே சமயம் காலி பானையே அதிக ஓசை எழுப்பும்! இவை இரண்டையும் இன்று மவுனமாகவே எனக்கு விளங்க வைத்துவிட்டீர்கள். பலநாட்கள் நான் மந்திரித்து வைத்திருந்த இந்த நாகங்கள், தாங்கள் ஒரே ஒரு முறை கூறிய மந்திரத்தால் செயலிழந்து விட்டது. அப்படி தாங்கள் என்ன மந்திரம் போட்டீர்கள் சுவாமி!” கதறிய படி
கேட்டான் அந்த மாந்த்ரீகன்.

மந்திரத்தால் பிறரை மயக்கியே பழக்கப் பட்ட அந்த மனிதன் தெய்வ அருளையும், வெறும் மந்திரத்தின் மகிமையாகவே எண்ணுவதை நினைத்து அவனுக்காக மனம் இறங்கினார் சுவாமிகள்.
‘‘அப்பனே நான் சொன்னது கருட பஞ்சாக்ஷர மந்திரம். முதலில் பிரணவத்தையும், இடையில் ‘‘ப”, ‘‘க்ஷி” என்ற இரண்டு எழுத்துக்களையும் கொண்டது. முடிவில் அக்னியின் பத்தினியை குறிக்கும் சப்தத்தை கொண்டது. ( பரம ரகசியமான மந்திரம் – கருட மந்திரம். அதை குரு உபதேசத்தின் மூலமாகவே பெற வேண்டும்.

ஆகவே இங்கு மறைத்து சொல்லப் பட்டிருக்கிறது.) அப்பனே இந்த மந்திரம் தனி வல்லமை உடையது. அதையும் தாண்டி இதனால் குறிக்கப் படும் கருட பகவான், சர்வ சக்தி படைத்தவர். அது மாத்திரமல்ல எனக்கு கருட மந்திரம் உபதேசம் செய்த எனது தாய் மாமா, அப்புள்ளார், வம்ச வம்சமாக இந்த மந்திரத்தை போற்றி பாதுகாப்பவர். இந்த மூன்றும் ஒன்று சேர்ந்ததால் தான். இந்த அதிசயம் நிகழ்ந்தது.’’ கருணையோடு அவனுக்கு, மந்திரம் மட்டும் பலன் அளிக்காது என்பதை சூசகமாக சொன்னார் தேசிகர். அதை அவனும் உணர்ந்து கொண்டான்.

‘‘சுவாமி தங்களிடம் வேறொரு
வேண்டுகோள்.’’
‘‘தாராளமாக சொல் அப்பனே!’’
ஆதரவாக மொழிந்தார் தேசிகர்.

‘‘என் பாம்புகளை கொண்டு வித்தை காட்டி தான் என்பிழைப்பை நான் ஒட்டுகிறேன். அதில் முக்கியமான நாகத்தை கருட பகவான் எடுத்துச் சென்றுவிட்டார். தயை கூர்ந்து அதை திருப்பி வாங்கித் தாருங்களேன்!’’ கெஞ்சாத குறையாக கேட்டான் மந்திரவாதி!

சுவாமிகள் புன்னகை பூத்தபடியே கண்களை மூடினார். மனதால் கருடனையும் தனது குருவையும் மனதார வணங்கி மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பித்தார். அவர் மந்திரம் ஜெபிக்க ஆரம்பித்த இரண்டொரு நொடிகளில் முன்னம் வந்த அதே கருடன் மீண்டும் வந்தது. எடுத்துச் சென்ற நாகத்தை எடுத்தவாறே போட்டு விட்டுச் சென்றது. நடந்ததை கண்ட தேசிகர், கருடன் சென்ற திசையை நோக்கி கண்களில் நீர் மல்க கை குவித்தார். கூட்டமும் மாந்த்ரீகனும் கூடவே வணங்கியது.

ஜி.மகேஷ்

The post கருடன் கருணை appeared first on Dinakaran.

Related Stories: