அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி பேசியுள்ளது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக உள்ளது : பழ.நெடுமாறன்

சென்னை : முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோடி என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ““பா.ச.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிடும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. என் மீது பழிசுமத்த வேண்டும் என்பதற்காக அரசமைப்புச் சட்டம் பற்றியும், பொய்யான புகார்களை காங்கிரசு உள்பட எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. பா.ச.க. அரசு அரசமைப்புச் சட்டத்தை மிகவும் மதிக்கிறது. அதனை இயற்றிய அம்பேத்கர் இப்போது வந்தால்கூட அரசமைப்புச் சட்டத்தை மாற்ற முடியாது” என தலைமையமைச்சர் மோடி பீகாரில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பேசியுள்ளார்.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பான முயற்சியில் மோடி அவர்கள் ஈடுபட்டுள்ளார். இப்போதும் சில பா.ச.க. தலைவர்கள் அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று அவ்வப்போது கூறி வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் கட்சியே பா.ச.க. என்பதை யாரும் மறைக்க முடியாது.இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டுடன் வெள்ளை அறிக்கை ஒன்றை ஆர்.எஸ்.எஸ். 1993ஆம் ஆண்டு சனவரி முதல் தேதி அன்று வெளியிட்டது. இந்த வெள்ளை அறிக்கையை தயாரித்த சுவாமி ஹீரானந்த் “நாட்டின் கலாச்சாரம் குணநலன்கள் சூழ்நிலைகள் ஆகியவற்றுக்கு எதிரான முறையில் தற்போதை அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அது அந்நிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்தது. இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை செயலிழக்கச் செய்த பிறகுதான் நம்முடைய பொருளாதார கொள்கை, நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகள் மற்ற தேசிய நிறுவனங்கள் ஆகியவை பற்றிய மறு சிந்தனையில் ஈடுபடவேண்டும்.

இந்த அரசியல் சட்டத்தை முழுமையாக ஒதுக்கித் தள்ளுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். இந்த அரசியலமைப்புச் சட்டம் விளைவித்துள்ள தீங்குகளுடன் ஒப்பிடும்போது 200 ஆண்டு ஆங்கிலேய ஆட்சி நாட்டுக்கு ஏற்படுத்திய சேதாரங்கள் மிகவும் குறைவானதே. பாரதத்தை இந்தியாவாக மாற்றுவதற்கான சதி தொடர்கிறது” எனக் கூறினார். இதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வமான கொள்கையாகும்.“மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருப்பதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்கவில்லை. பாரதம் ஒரே நாடாக மட்டுமே இருக்கவேண்டும். மொழிவழி மாநிலங்களோ, மாநில அரசுகளோ ஒருபோதும் கூடாது. இந்தியாவை நூறு சனபாதங்களாகப் பிரிக்கவேண்டும். இந்திய அரசு மட்டுமே இதை ஆளவேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த கோல்வால்கர் பகிரங்கமாக அறிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கலாச்சாரம், மதம், அரசியல் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்த குறிக்கோளினை கொண்டதாகும். மத அடிப்படையில் இந்து தர்மம், கலாச்சார அடிப்படையில் இந்து சமற்கிருதம், தேசத்தின் அடிப்படையில் இந்து ராஷ்ட்ரம் ஆகிய மூன்று அடிப்படை கொள்கைகளைக் கொண்டது.
ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த சுதர்சன் பின்வருமாறு அறிவித்தார்.

1.இந்து ராஷ்டிராவைப் பிரகடனப்படுத்துதல்
இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றப்படும். இந்துமதம் அரசு மதமாகவும், இந்த நாடு இந்துக்களின் நாடு என்றும் அறிவிக்கப்படும். தற்போதைய அரசியல் சட்டம் தூக்கியெறியப்படும். மனுதர்ம சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் சட்டம் வகுக்கப்படவேண்டும்.

2.கலாச்சார அடித்தளமாக வேத பார்ப்பனியம்
பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் கலாச்சாரங்கள் ஒழிக்கப்பட்டு வேத பார்ப்பனிய கலாச்சாரம் திணிக்கப்படும்.

3.சமற்கிருத மொழி மேலாண்மை
இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேவநாகரி எழுத்திலேயே எழுத வற்புறுத்தப்படும். நாளடைவில் சமற்கிருத மொழியை அனைவரும் கட்டாயமாக கற்கவேண்டிய நிலை உருவாக்கப்படும். சமற்கிருதம் ஆட்சிபீடம் ஏறும்வரை இடைக்கால ஏற்பாடாக இந்தி இருக்கும். சமற்கிருதமே ஒரே ஆட்சிமொழியாக ஆக்கப்படும்.

4.சமூகநீதி ஒழிக்கப்படும்
பிற்பட்ட – ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு திட்டம் கைவிடப்படும்
மேலே கண்டவை போன்ற பிற்போக்கான கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உறுதிபூண்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மொழிவழி மாநில உணர்வுகளுக்கும் எதிராகச் செயல்படும் பா.ச.க. அரசு குறித்து அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய தனது இறுதி சொற்பொழிவில் பின்வருமாறு குறிப்பிட்டார்-“இந்த அரசியல் சட்டத்தை யாராலும் தகர்க்க முடியாது. ஆனால், இந்திய அரசின் தவறான கொள்கைகளின் மூலம் இச்சட்டத்தை உள்ளிருந்தே செயலற்றதாக ஆக்க முடியும்” என எச்சரித்தார். அவரது தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய எச்சரிக்கை இப்போது செயல்படத் தொடங்கிவிட்டது,” இவ்வாறு தெரிவித்தார்.

The post அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி பேசியுள்ளது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக உள்ளது : பழ.நெடுமாறன் appeared first on Dinakaran.

Related Stories: