தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமியை ஆதரித்து சென்னையில் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம்: வீடுவீடாக நடந்து சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்

சென்னை: மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன், வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர், ஐசிஎப் பகுதியில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், வீடு, வீடாக நடந்து சென்றும், வாகனங்களில் சென்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு கோரினார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த மாதம் 22ம் தேதி திருச்சியில் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

தொடர்ந்து அவர் தொகுதி வாரியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவரின் பொதுக்கூட்டம் எழுச்சியுரை வாக்களர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நடந்து சென்றும் வீடு வீடாக சென்றும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அரசின் சாதனைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வழங்கியும் வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு சேகரித்தார். இதன்பிறகு வாகனத்தில் சென்று தெரு தெருவாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் வேட்பாளரும் உடன் இருந்தார். ஜி.கே.எம்.காலனி 9வது தெருவில் பிரசாரத்தை துவக்கிய முதல்வர் ஸ்டாலின் சென்ற இடங்களில் எல்லாம் மகளிர் பெருமளவில் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிறுபான்மையின மக்களும், கூட்டணி கட்சியினரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேயர் சிட்டிபாபு மேம்பாலம் வரை தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்டார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து ஐசிஎப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்த ஜீப்பில் அவர் தயாநிதி மாறனுடன் சென்றார். அப்போது இருபுறமும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாகமான வரவேற்பை அளித்தனர். கூடியிருந்த பொதுமக்களை பார்த்து கையை அசைத்து வாக்குகளை சேகரித்தார். அவருடன் பலரும் சிரித்த முகத்தோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். திமுகவுக்கே எங்கள் வாக்கு என்று முழக்கமிட்டனர்.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்ற மக்கள், பொங்கல் பண்டிகையையின் போது, பொங்கல் தொகுப்புடன் 1,000 ரூபாய் பணமும் வழங்கியதால், நாங்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினோம். பேரிடர்கள் ஏற்படும் போதெல்லாம் முதல்வர் எங்களுக்கு உதவித் தொகை வழங்கியுள்ளார். கொரோனா காலத்தில் 4000 ரூபாயும், வெள்ளம் பாதித்த நேரத்தில் 6,000 ரூபாயும் நிவாரணம் வழங்கி எங்களை பாதுகாத்தார் என்று நன்றியுடன் தெரிவித்தனர். காலை உணவுத் திட்டத்தில், எங்கள் குழந்தைகள் வயிறார உணவு உண்டு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படிக்கிறார்கள்.

அதனால் நாங்கள் கவலையின்றி வேலைக்குச் சென்று வருகிறோம் என்று தாய்மார்கள் மகிழ்ச்சியோடு கூறினர். தாய்வீட்டுச் சீதனம் போல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ரூ.1,000 எங்களுக்கு வழங்கி வருகிறார் என்று மகிழ்ச்சி பொங்க தாய்மார்கள் அப்போது கூறினர். அரசு ஊழியர்கள், அகவிலைப்படி உரிய நேரத்தில் வழங்கியதற்கும், மேலும் தேவையான கோரிக்கைகளை நிதிநிலை சரியான உடன் நிறைவேற்றுவதாக முதல்வர் அறிவித்ததற்கும் நன்றி தெரிவித்தனர். புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1,000 வழங்கி வருவதால், கல்லூரி மாணவிகள் ஊக்கமுடன் படித்து வருவதாக தெரிவித்தனர்.

நான் முதல்வன் திட்டத்தால் தங்களுக்கு திறன் மேம்பட்டு, வேலைவாய்ப்பு எளிதில் கிடைத்தற்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். கூடியிருந்த சிறுபான்மையின மக்கள் அதிமுகவின் போலி மதச்சார்பின்மை வேடத்தை நம்பி நாங்கள் ஏமாற மாட்டோம். எப்போதும் நாங்கள் திமுகவின் பக்கம் தான் நிற்போம் என்று தெரிவித்தனர். போலியான கேரண்டிகள் கொடுக்கும் மோடியை நம்ப மாட்டோம். சொல்லியதைச் செய்வது மட்டுமல்லாமல், சொல்லாததையும் செய்து முடிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளோம்.

அதனால் உதயசூரியனுக்கே எங்கள் வாக்கு என்று எல்லோரும் சேர்ந்து முழங்கினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைக்காக அந்தப் பகுதி மக்கள், வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டு, தோரணங்கள் கட்டி, ஆர்வத்தோடு திரண்டு நின்று இசை வாத்தியங்களோடு வரவேற்றனர். அந்தப் பகுதியே விழாக் கோலம் பூண்டிருந்தது. இந்நிகழ்வின் போது, இந்துசமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கிரிராஜன், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத் தலைவர் ரங்கநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதிமாறன் ஆகியோரை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். நடைபயணம் மூலம் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து அவர் மத்திய சென்னை தொகுதி, தென்சென்னை தொகுதியை இணைக்கும் மைய பகுதியான, பெசன்ட்நகரில் பிரசாரத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார். அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் எழுச்சியுரையாற்றுகிறார்.

* கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் நிறைவு
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது. இதனையடுத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திருவள்ளூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திண்டுக்கல்லிலும், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நாகப்பட்டினத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்கின்றனர். இதே போல மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆலந்தூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அந்தந்த பகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரத்தில் அவர்கள் ஈடுபட உள்ளனர்.

* கால்பந்து விளையாடி உற்சாகம்
ஜி.கே.எம்.காலனி பகுதியில் திறந்த ஜீப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி வந்து அந்த பகுதியில் கால்பந்து விளையாடிய குழுவினருடன் சேர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் கால்பந்து விளையாடினார். மேலும் கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து கூறி, வசதிகள் ஏதும் தேவைப்படுகிறதா என்று அக்கறையுடன் கேட்டறிந்தார்.

The post தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமியை ஆதரித்து சென்னையில் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம்: வீடுவீடாக நடந்து சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார் appeared first on Dinakaran.

Related Stories: