திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி..!!

சென்னை: திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவில், அவருக்கு எதிராக வன்கொடுமை தடை சட்ட பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது வேட்புமனுவை ஏற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுவில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நயினார் நாகேந்திரன் தன் மீதான வழக்கு குறித்த விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை நிராகரிக்க ஆட்சேபம் தெரிவித்தபோது விசாரணை நடத்தவில்லை. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத, தகவல்களை மறைத்த வேட்புமனுவை ஏற்றதை மறுபரிசீலனை செய்ய மனுவில் கோரியிருந்தார். மேலும் தனது ஆட்சேபம் மீது விசாரணை நடத்தும் வரை நெல்லை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்கவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தல் நடவடிக்கைகள் முடியும் தருவாயில் இருப்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர். வாக்குப்பதிவை தவிர மற்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதேசமயம், மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தபோது, மனுதாரர் அந்த தொகுதியின் வாக்காளரோ அல்லது வேட்பாளரோ அல்ல என்பதால் தேர்தல் வழக்கை தாக்கல் செய்ய உரிமை இல்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து தேர்தல் முடிந்த பிறகு அவர் உரிய நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டினர்.

The post திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Related Stories: