தமிழகத்தில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ1,309 கோடி பணம், பொருள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை, ஏப். 30: தமிழகத்தில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ1,309 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த மாதம் 16ம் தேதி அறிவித்தார். அதுமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. அதன்படி, ஆவணங்கள் இல்லாமல் ரூ50 ஆயிரத்துக்கு அதிகமாக பணம் மற்றும் பொருட்கள் எடுத்துச் சென்றால் கைப்பற்றப்பட்டது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டத்திலேயே கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது. தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்தாலும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த தமிழக எல்லையோர மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுவதால் பறக்கும் படை சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 28ம் தேதி காலை 9 மணி வரை தமிழகத்தில் பறக்கும் படைகள் மற்றும் வருமான வரித்துறை மூலம் ரூ179.91 கோடி ரொக்கப்பணமும், ரூ1083,78 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, ரூ8.65 கோடி மதிப்பிலான மதுபான வகைகள், ரூ35.80 கோடி மதிப்பிலான இலவச பரிசு பொருட்கள், ரூ1.36 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் என மொத்தம் ரூ1,309.52 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சிசிடிவி வேலை செய்கிறதா? அதிகாரிகளுக்கு உத்தரவு
தமிழகத்தில் நீலகிரி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் இரண்டு நாட்களுக்கு முன் சிசிடிவி கேமரா பழுதாகி, ஒளிபரப்பாகவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். பின்னர் பழுது சரி செய்யப்பட்டு, தற்போது சரியாக இயங்கி வருகிறது. இதுபோன்று ஈரோடு நாடாளுமன்ற தொகுதியிலும் சிசிடிவி வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. கோடை வெயில் அதிகமாக உள்ளதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இருந்தாலும், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் ஒழுங்காக வேலை செய்கிறதா? அங்கு ஏதாவது தொழில்நுட்ப பிரச்ைன ஏற்பட வாய்ப்புள்ளதா? என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சென்னைக்கு உடனடியாக அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

The post தமிழகத்தில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ1,309 கோடி பணம், பொருள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: