வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்ட பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும்: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதி

சென்னை: வேளச்சேரி பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டத்தை 18 மாதங்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதியம்மாள் நகர், தாடண்டர் நகர், அரசு பண்ணை ஆகிய பகுதிகளில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர் ரவி, பகுதி செயலாளர் ஷேக் அலி, பழனி உள்ளிட்ட பலரும் உடன் சென்று வாக்கு சேகரித்தனர். பின்னர் ஜெயவர்தன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான் நாடாலுமன்ற உறுப்பினராக இருந்தபோது, வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்னையை முடித்துவத்தேன். ஆனால் அந்தப்பணி 5 வருடமாக நிலுவையில் உள்ளது.

மீண்டும் நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அந்த பணியை 18 மாதங்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைப்பேன். இதனால் லட்சகணக்கான தென்சென்னை பகுதிமக்கள் பயன்பெறுவார்கள். அதேபோல் மெட்ரோ ரயில் திட்டத்தை வேகப்படுத்தி, ராஜிவ்காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுப்பேன். ஒன்றிய அரசிடமிருந்து நிதி பெற்று மிக பெரிய அளவில் மருத்துவமனை ஒன்று சோழிங்கநல்லூர் தொகுதியில் அமைப்பேன்.

ரயில் நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதிபெற்று பல்வேறு திட்டங்களை தென்சென்னை தொகுதியில் அமைப்பேன். இனிவரும் காலங்களில் தென்சென்னை தொகுதியில் வெள்ளம் ஏற்படாத வகையில், துரிதமாக நடவடிக்கை எடுப்பேன். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள பெருங்குடி குப்பை கிடங்கு ஒரு வருடத்திற்குள் 100% அகற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்ட பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும்: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: