அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமத்துவ நாள் உறுதி மொழியை ஏற்றார்

சென்னை: அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு. அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அண்ணல் அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ம் நாள் மராட்டிய மாநிலத்தில் பிறந்தவர். இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய அம்பேத்கர், பரோடா மன்னர் உதவியுடன் அமெரிக்கா சென்று உயர்கல்வி பயின்றார். உயர் கல்விக்காக வெளிநாட்டிற்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அம்பேத்கருக்கு உண்டு.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அம்பேத்கர் பிறந்த சாதி காரணமாக இழைக்கப்பட்ட பல்வேறு கொடுமைகளுக்கும் அவமானத்திற்கும் ஆளானவர். அதன் காரணமாக, தீண்டாமை கொடுமையை எதிர்த்து கடுமையாக போராடியவர். பல்லாயிரக் கணக்கானவர்களுடன் இந்து சமயத்தை துறந்து புத்த சமயத்தை தழுவியவர்.

பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர். ஆசிரியர், இதழாளர், எழுத்தாளர், சமூக நீதி புரட்சியாளர் என பன்முகத்திறன்களை பெற்றவர். இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் வரைவு குழு தலைவராக விளங்கிய மிகப்பெரிய சட்டமேதை அம்பேத்கர். நாடு சுதந்திரம் அடைந்த பின், பிரதமர் நேரு அமைச்சரவையில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் திகழ்ந்தவர்.

அம்பேத்கர் புகழைப் போற்றும் வகையில் வியாசர்பாடி அரசு கலைக்கல்லூரிக்கு அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி என்றும், சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என்றும் பெயர் சூட்டியதுடன், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் மணிமண்டபம் அமைத்து, அதில் அவர் சிலையையும் நிறுவி அம்பேத்கரை போற்றியுள்ளது தமிழக அரசு.

சாதி, சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாளச் சின்னமாக விளங்கிய அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் நாளை’சமத்துவ நாள்’ என அறிவித்து, அந்நாளில் தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம் என கடந்த 2022ஆம் ஆண்டு அறிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

அதன்படி, அம்பேத்கரின் 134வது பிறந்தநாளான இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமத்துவ நாள் உறுதிமொழி” ஏற்கப்பட்டது. சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்று அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

* சமத்துவ நாள் உறுதிமொழி: ”

சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும் சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்” என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

 

The post அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமத்துவ நாள் உறுதி மொழியை ஏற்றார் appeared first on Dinakaran.

Related Stories: