மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்; தமிழகத்தில் அடுத்தடுத்து ராகுல் பிரசாரம்: 4 இடத்தில் பேசுவதற்கு ஏற்பாடு

சென்னை: மோடியை மிஞ்சும் வகையில், தமிழகத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ராகுல்காந்தி சுற்றுப்பயண திட்டத்தை காங்கிரஸ் மேலிடம் வகுத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 4 இடங்களில் பிரசாரம் செய்ய அடுத்தடுத்து ராகுல்காந்தி தமிழகம் வர உள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம்தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதேபோன்று, திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களும் பிரசாரங்களை தொடங்கி விட்டனர். அவர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பிரசார களத்தில் இறங்கியுள்ளனர்.

இதற்கிடையே, பாஜ தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர்களை அறிவிக்கும் முன்பே, பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடுத்தடுத்து 5 முறை வந்து சென்று விட்டார். சென்னை மற்றும் தூத்துக்குடியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்ட போது வராதவர், இப்போது ஓட்டுக்காக அடுத்தடுத்து தமிழகம் வந்தது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பாஜவினரோ பிரதமர் மோடியின் தமிழகம் வருகை மாற்றத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். இதையடுத்து பிரதமர் மோடியின் பிரசாரத்தை மிஞ்சும் வகையில் தமிழ்நாட்டில் பிரசாரத்தை மேற்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. அதன்படி, ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளனர். இவர்கள் பிரசார பயணம் பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு சவாலாக இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பிரசார பயணத் திட்டத்தை வகுக்கும்படி மேலிடத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட டெல்லி மேலிடம் ராகுல்காந்தி அடுத்தடுத்து 3 முறைக்கு மேல் தமிழகத்துக்கு வரும் வகையில் பயண திட்டத்தை வகுத்து வருகிறது. இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த தேர்தலில் ஒரே நாளில் 4 இடங்களில் ராகுல்காந்தி பிரசாரம் செய்தார். இந்த முறை 3 அல்லது 4 இடங்களில் அடுத்தடுத்து தமிழகம் வந்து பிரசாரம் செய்யும் வகையில் பயண திட்டம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்கள். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய ஏதாவது ஒரு இடம். கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி தொகுதிகள் சார்ந்த ஒரு இடம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் தொகுதிகளை சார்ந்த ஒரு இடம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் தொகுதிகளில் ஒரு இடம் என 3 அல்லது 4 இடங்களில் ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். அப்போது இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுவான இடத்தில் அவர் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ராகுல்காந்தி அடுத்தடுத்து தமிழகம் வர இருப்பது காங்கிரசார் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது தமிழக பிரசாரம் ஏப்ரல் 10ம்தேதிக்கு பிறகு இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்; தமிழகத்தில் அடுத்தடுத்து ராகுல் பிரசாரம்: 4 இடத்தில் பேசுவதற்கு ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: