நாளை சனிக்கிழமை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் இயங்கும்

சென்னை: அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் நாளை சனிக்கிழமை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட சுற்றறிக்கை: பொது மக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் வருவாயை பெருக்கும் நோக்கிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் 2023-24ம் நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் கடைசி சனிக்கிழமையான 30ம் தேதி மட்டும் ஏற்கனவே தற்போது சனிக்கிழமைகளில் இயங்கிவரும் 100 சார்பதிவகங்களுடன் இதர அனைத்து சார்பதிவகங்களும் செயல்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மார்ச் 30ம் தேதி சனிக்கிழமை அனைத்து சார்பதிவகங்களும் வழக்கம்போல் காலை 10 மணி முதல் ஆவண பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு உரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் தவிர பதிவு விதி 4க்கு உட்பட்டு பதிவுச் சட்டம் கீழுள்ள கட்டண அட்டவணையில் கூறப்பட்டவாறு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்பட வேண்டும். மேலும் அன்றைய தினங்களில் ஸ்டார் 2.0 திட்டப்படி அனைத்து அலுவலகங்களிலும் பதிவுப் பணி இணையவழி தடையின்றி நடைபெற ஏதுவாக பொதுமக்களுக்கு முன் பதிவு செய்திடும் வசதி மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்களுக்கான உதவி மையம் மற்றும் உதவி எண் வசதி ஆகியவற்றை எவ்வித குறைபாட்டுக்கும் இடமின்றி உடன் ஏற்படுத்திட டிசிஎஸ் மென்பொறியாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் செயல்படுவதை கண்காணிக்கவும் கோரப்படுகிறார்கள்.

The post நாளை சனிக்கிழமை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் இயங்கும் appeared first on Dinakaran.

Related Stories: