தேர்தல் பத்திரம் உலகின் மிகப்பெரிய ஊழல்: ஒன்றிய நிதியமைச்சரின் கணவர் பரகலா பிரபாகர் குற்றச்சாட்டு

பெங்களூரு: ஒன்றிய அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரம் உலகின் மிகப்பெரிய ஊழல் என்றும் இது பாஜவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் குற்றம்சாட்டி உள்ளார்.

கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு தேர்தல் பத்திரத்தை கொண்டு வந்தது மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு. இது ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த தேர்தல் பத்திரத்தை ரத்து செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கே எதிரானது என்று கூறி அதனை ரத்து செய்து உத்தரவிட்டது. தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற தொகையில் பாஜ மட்டுமே 50 சதவீதத்திற்கும் மேல் நிதியை பெற்றது எஸ்பிஐ வங்கி சமர்பித்த ஆவணங்களில் தெரியவந்தது. இது மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு செய்த மிகப்பெரிய ஊழல் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் தேர்தல் பத்திரம் உலகில் நடந்த மிகப்பெரிய ஊழல் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தேர்தல் பத்திரம் இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஊழல். இது உலகிலேயே மிகப் பெரிய ஊழல் என்பதை இந்திய மக்கள் அனைவரும் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சினையின் மூலம், வாக்காளர்கள் ஆளும் பாஜ அரசை கடுமையாக தண்டிப்பார்கள்.

இது ஒன்றிய பாஜ அரசிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். தேர்தல் பத்திர விவகாரம் இன்று இருப்பதைவிட மிக வேகம் பெறும். தற்போது இருப்பதை விட அதிகளவில் பூதாகாரமாக இந்த விவகாரம் உருவெடுக்கும். இது, பாஜ, ஒன்றிய அரசை கடந்து பொது மக்களிடம் அதிவேகமாக சென்றடைய துவங்கிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தேர்தல் பத்திரம் உலகின் மிகப்பெரிய ஊழல்: ஒன்றிய நிதியமைச்சரின் கணவர் பரகலா பிரபாகர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: