புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு முடித்து வைத்ததை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு முடித்து வைத்ததை எதிர்த்து அதிமுக தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி ஆணையத்தை கலைத்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் முந்தைய அதிமுக அரசு, விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து முந்தைய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்னை இந்த வழக்கில் இணைக்கக் கோரி, அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசு முடிவெடுத்த பின், கடைசி நேரத்தில் வழக்கில் இணைக்கும்படி மூன்றாவது நபர் கோர முடியாது. இதுநாள் வரை வழக்கில் இணைக்க கோராத ஜெயவர்தன், வாபஸ் பெற முடிவு செய்த பின் வழக்கில் இணைக்க கோரியுள்ளது தவறு. மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசுக்கு உரிமை உள்ளது என்றார்.

இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், வழக்கை தாக்கல் செய்தவர் வாபஸ் பெறுவதாக இருந்தால் எதிர்மனுதாரர் கூட ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. இந்த நிலையில் மூன்றாம் நபர் எப்படி எதிர்க்க முடியும். முந்தைய ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் உள்ளன. மனுதாரரின் தந்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல் புகார் உள்ளது.

நீதிபதி ரகுபதி ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்காத நிலையில் அதன் பரிந்துரைகளை ஆதாரமாக கருத முடியாது என்று வாதிட்டார். அதற்கு, ஜெயவர்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, பொதுநலன் சம்பந்தப்பட்ட இந்த வழக்கை எப்படி வாபஸ் பெற முடியும்? உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால் நீதிமன்றத்தை அணுகவில்லை. தற்போது அரசு எந்த காரணமும் தெரிவிக்காமல் வாபஸ் பெறக் கோருவதால் வழக்கில் இணைக்க கோருகிறோம் என்றார்.

அப்போது நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசு முடிவு செய்தால் யாரிடம் அனுமதி பெற வேண்டும் என ஜெயவர்தன் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு ஜெயவர்தன் தரப்பு வழக்கறிஞர், இந்த மாநிலத்தின் குடிமகன் என்ற முறையில் கோரிக்கை வைக்கிறோம், 2023ம் ஆண்டு ஜூலை மாதம் தான் வழக்கை வாபஸ் பெற அரசு முடிவெடுத்தது. அதற்கு முன் வாபஸ் பெறும் எண்ணம் இல்லாததால் வழக்கில் இணைக்க கோரவில்லை என்று விளக்கமளித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் மேல்முறையீடு செய்யும் முடிவை அரசு வாபஸ் பெற அரசாணை பிறப்பித்த நிலையில் 3ம் நபர் இந்த வழக்கில் தன்னை இணைக்க கோர முடியாது. எனவே, ஜெயவர்தனின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

The post புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு முடித்து வைத்ததை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: