எம்.ஜி.ஆர்., ‘அம்மா’ ஜெயலலிதா என புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி.. அதிமுக வாக்கு வங்கியை குறிவைத்து பேசுவதாக விமர்சகர்கள் கருத்து!!

திருப்பூர் :பல்லடத்தில் நடைபெறும் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,”தமிழ்நாட்டுக்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்.ஜி.ஆர். அதனால் அவர் இன்றும் நினைத்து பார்க்கப்படுகிறார். தமிழ்நாட்டில் எம்ஜிஆரை ஒப்பற்ற தலைவராக மக்கள் போற்றுகின்றனர். எம்.ஜி.ஆரை போலவே அம்மா ஜெயலலிதாவும் மக்கள் மத்தியில் நிலை பெற்றிருந்தவர். ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்த வகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியும். அரசியல்ரீதியாக ஜெயலலிதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்,”இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகும் எம்ஜிஆர்,ஜெயலலிதாவை மோடி புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா ஊழல் செய்ததாலே தண்டிக்கப்பட்டார் என கடந்தாண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது, பாஜக – அதிமுக கூட்டணியில் கடும் விரிசலை உண்டாக்கியது. இந்த சூழலில் வழக்கமாக ஜெயலலிதாவை ஜி என்று அழைக்கும் பிரதமர் மோடி, பல்லடத்தில் பேசும்போது அம்மா ஜெயலலிதா என்று குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாள் அண்மையில் வந்ததை குறிப்பிட்டும் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியிருந்தார். அதிமுக வாக்கு வங்கியை குறிவைத்து மோடி இவ்வாறு பேசியிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே வாஜ்பாய் போன்ற பாஜக தலைவர்களை புகழாமல் ஜெயலலிதாவை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார் என்று குறிப்பிட்ட மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், மோடியா? லேடியா? எனக் கேட்டு தன்னை உதாசினப்படுத்திய ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி வாக்கு வேட்டையாட பிரதமர் மோடி வெட்கப்பட்டிருக்க வேண்டும் என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

The post எம்.ஜி.ஆர்., ‘அம்மா’ ஜெயலலிதா என புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி.. அதிமுக வாக்கு வங்கியை குறிவைத்து பேசுவதாக விமர்சகர்கள் கருத்து!! appeared first on Dinakaran.

Related Stories: