புழல் ஏரியில் நீர் திறப்பு 2,000 கன அடியாக அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

சென்னை: புழல் ஏரியில் நீர் திறப்பு 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 3,704 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏற்கனவே நேற்று 570 கனஅடியாக நீர்வரத்து வந்த நிலையில், இன்று 380 கனஅடியாக உள்ளது. ஒரே நாளில் புழல் ஏரிக்கு 212 மில்லியன் கனஅடி தண்ணீர் வந்துள்ளது. புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி முதற்கட்டமாக வினாடிக்கு 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 21.2 அடி உயரத்தில் தற்போது நீர் இருப்பு 20 அடி உயரத்தை தாண்டியுள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 200 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக இன்று காலை உயர்த்தப்பட்டது. நேற்று ஒரு மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 2 மதகுகள் வழியாக தண்ணீர் பாய்ந்தோடுகிறது. தொடர் மழை காரணமாக மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் 1000 கனஅடியில் இருந்து தற்போது 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் 14 கிலோ மீட்டர் கால்வாய் வழியாக எண்ணூர் கடலில் சேரவுள்ளது. தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

The post புழல் ஏரியில் நீர் திறப்பு 2,000 கன அடியாக அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Related Stories: