திருக்கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். அதன்படி, குடமுழுக்குகள் நடைபெறாத திருக்கோயில்களை கண்டறிந்து திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தும் பணிகளை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த 26 மாதங்களில் அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் மு.க ஸ்டாலின் 1,000 ஆண்டுகள் முற்பட்ட தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து திருப்பணி மேற்கொள்ள 2022 – 2023ம் நிதியாண்டில் ரூ.100 கோடியும், 2023 – 24ம் நிதியாண்டிற்கு ரூ.100 கோடியும் அரசு மானியமாக வழங்கியுள்ளார். அதன்படி 2022 – 2023 ஆம் நிதியாண்டில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் 113 தொன்மையான திருக்கோயில்களும், 2023 – 24 ஆம் நிதியாண்டில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 84 திருக்கோயில்களும் அரசு மானியம், திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாநில அளவிலான வல்லுநர் குழுவால் 7,142 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அதில் 2,235 திருக்கோயில்களில் ரூ.1,120 கோடி மதிப்பீட்டிலான 5,855 திட்ட மதிப்பீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி திருக்கோயில்களை மேம்படுத்தும் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு அனைத்து தரப்பினரும் போற்றிடும் வகையில் செயலாற்றி வரும் இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக 1,000 – வது குடமுழுக்காக நடைபெறும் சென்னை, மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் சமய சான்றோர்கள், ஆன்மிகவாதிகள் மற்றும் இறையன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் பெட்டகங்களான திருக்கோயில்களைப் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், 1,000-வது குடமுழுக்காக சென்னை, மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் திருக்கோயில் குடமுழுக்கு வருகின்ற 10ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
The post முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் 1,000வது குடமுழுக்கு விழா 10ம் தேதி நடக்கிறது: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.