ரூ.2000 நோட்டுக்களை மாற்ற அடையாள ஆவணங்களை கட்டாயமாக்கக் கோரிய வழக்கு : அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!!

டெல்லி: ரூ.2000 நோட்டு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்து வந்த ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறப்போவதாக ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) கடந்த மாதம் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் “ரூ.2000 நோட்டுக்களை எந்த அடிப்படை அடையாள அட்டையும் இல்லாமல் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்பதை எதிர்க்கிறோம்.அதனால் அடையாள அட்டைகளுடன் ரூ.2000 நோட்டுகளை மாற்றும்படி புதிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்’’ என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், வங்கியில் ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள எவ்வித அடையாள அட்டைகளும் கொடுக்க தேவையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இந்த தீர்ப்புக்கு எதிராக மனுதாரர் அஸ்வினிகுமார் உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அப்போது நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வு முன்பு, ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதில் நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும் இதை தடுக்க அடையாள ஆவணங்களை தருவதை கட்டாயம் ஆக்க வேண்டும் எனவும் முறையிடப்பட்டது. எனினும் தற்போது நடைபெறுவது கோடைகால சிறப்பு நீதிமன்றம் என்றும் இதனை தங்களால் அவசரமாக விசாரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். கோடை விடுமுறை முடிந்து வழக்கமான பணிகள் தொடங்கும் போது முறையிடுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

 

The post ரூ.2000 நோட்டுக்களை மாற்ற அடையாள ஆவணங்களை கட்டாயமாக்கக் கோரிய வழக்கு : அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: