கேரள மாநிலம் கண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயிலில் தீ விபத்து… விபத்தா? திட்டமிட்ட சதிச்செயலா..?

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் கண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடை அருகே ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் 8வது யார்டில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது இன்று அதிகாலை 1:25 மணிக்கு, ரயிலின் பின்புறம் உள்ள 3 பெட்டிகளில் தீ பரவியது, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.ரயிலின் ஒரு பெட்டி முழுமையாக எரிந்த நிலையில், 2 பெட்டிகளில் பற்றிய தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.

ரயிலின் ஒரு பெட்டிக்கு தீ வைக்கப்பட்ட நிலையில் மற்ற பெட்டிகள் உடனடியாக கழட்டிவிடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் என்பதால் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ரயில் பெட்டிக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி இரவு கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 3 பயணிகள், சக பயணி ஒருவரால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டனர்.

9 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி ஷாருக் சைபி என்ற இளைஞரை மகாராஷ்டிர மாநிலத்தில் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.ஷாருக் சைபி எரித்த ரயில் பெட்டியில்தான் தற்போது தீ பரவியுள்ளது. இந்த ரயில் எரிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு வருகிறது.

The post கேரள மாநிலம் கண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயிலில் தீ விபத்து… விபத்தா? திட்டமிட்ட சதிச்செயலா..? appeared first on Dinakaran.

Related Stories: