×
Saravana Stores

கடற்கரையில் இறந்து கிடந்த ஆமை குஞ்சுகள்

கடலூர், மார்ச் 26: கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகளின் இனப்பெருக்க காலமாகும். இந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் கடலோர கிராமங்களில், ஆலிவ் ரெட்லி இன ஆமைகள் கடற்கரையோரம் முட்டையிட்டு செல்லும். ஆனால் இந்த முட்டைகளை நாய் போன்ற விலங்குகள் உடைத்து விடுகின்றன. மேலும் கடற்கரையோரம் மனிதர்கள் நடந்து செல்லும்போது முட்டைகள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. இதனால் ஆமைகள் இனம் அழிந்துபோகும் நிலை உருவானது.

இதை தடுக்க வனத்துறையினர் பொரிப்பகம் அமைத்து கடற்கரையோரம் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து வந்து பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து, பின்னர் முட்டையில் இருந்து ஆமை குஞ்சு வெளிவந்ததும் அவற்றை கடலில் கொண்டு விடுவது வழக்கம். இந்நிலையில் தற்போது அந்த பொரிப்பகத்தில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த முட்டைகளில் இருந்து ஆமை குஞ்சுகள் தானாகவே வெளியே வந்து விடுகின்றன. அவை கடற்கரை மணல் பரப்புகளில் செல்லும்போது அதிக உஷ்ணம் தாங்காமலும், நண்டு போன்ற உயிரினங்கள் கடித்து வைத்ததாலும், கடற்கரையில் நேற்று காலை 100க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் இறந்து கிடந்தன. ஆமை இனத்தை பாதுகாப்பதற்காக வைக்கப்பட்ட பொரிப்பகம் பராமரிப்பு இல்லாததால், இந்த ஆமை குஞ்சுகள் இறந்து கிடப்பதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவிக்கின்றனர். வனத்துறை அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி, பொரிப்பகத்தில் இருந்து வெளிவரும் ஆமைகளை பாதுகாப்பாக கடலில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
× RELATED காந்திகிராமம் பூங்கா விளையாட்டு...