×
Saravana Stores

251 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

தர்மபுரி, மார்ச் 23: உலக தண்ணீர் தினத்தையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் முதன்முறையாக 251 ஊராட்சிகளில் நேற்று கிராம சபைகூட்டம் நடந்தது. இதில் நீரை பாதுகாத்தல், குடிநீர் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பையடுத்து, உலக தண்ணீர் தினமான நேற்று, முதன்முறையாக தர்மபுரி மாவட்டம் முழுவதும் 251 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஒவ்வொருவரும் நீரை பாதுகாத்தல், பயன்பாட்டினை குறைத்தல் மற்றும் அனைத்து வீடுகளிலும் மழை நீரை சேகரித்தல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புதிய குடிநீர் ஆதாரங்களை உருவாக்குதல், பாரம்பரிய நீர் நிலைகளை புனரமைத்தல், ஆக்ரமிப்புகளை அகற்றுதல் ஆகியவற்றுக்கு ஏதுவாக அனைத்து நீர் நிலைகளையும் கணக்கெடுத்து, அதற்கான திட்டங்களை  தீட்டுதல், சமூக காடுகள் வளர்த்தல் மற்றும் பல்வேறு திட்ட செயல்பாடுகள் குறித்தும், ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குதல், அதற்கான மக்கள் பங்கேற்புத்தொகை செலுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. தர்மபுரி ஒன்றியம், கோடுஅள்ளி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், கலெக்டர் சாந்தி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் பற்றி விவாதிக்கப்பட்டதோடு, கோடுஅள்ளி ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொது செலவினங்கள், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், பாரத்நெட் என்ற இணையதள வசதியை அமைப்பதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் மையங்களை நிறுவி செயல்படுத்த ”அனைவருக்கும் இ-சேவை மையம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும். கழிவுநீர் ஓடைகளிலோ அல்லது பொது இடங்களிலோ குப்பைகளை கொட்டுவது, பிளாஸ்டிக் பைகளை தூக்கி எறிவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும் போது, துணிப்பைகளை எடுத்துச்செல்ல வேண்டும்.

மழைநீர் சேமிப்பு, இன்றைய காலக்கட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து, மழைநீர் சேகரிப்பதன் மூலம் மண்வளம் மேம்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயரும். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை, கடைக்கோடி கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. கிராமங்களின் வளர்ச்சிக்கு, அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை, பொதுமக்களும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் மாலா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பத்ஹி முகமது நசீர், வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் மாலினி, தர்மபுரி தாசில்தார் ஜெயசெல்வம், தர்மபுரி பிடிஓ கணேசன், தர்மபுரி மின் மாவட்ட மேலாளர் சதீசன், கோடுஅள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் சித்ரா குமார், துணை தலைவர் சக்கரபாணி, அரசுத் துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Gram Sabha ,
× RELATED ஆண்டிமடம் கிராம சபை கூட்டம்